நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடக் காரணம் தமிழரா? சண்டிகரைச் சேர்ந்தவரா? – ஒரு விளக்கம்

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலுதான் காரணம் என்று சொல்லப்பட்டுவந்தது. ஆனால் சில ஊடகங்களில் அத்தீர்ப்புக்குக் காரணமானவர் சண்டிகரைச் சேர்ந்த ஹர்மான்சித்து என்று செய்திகள் வந்தன.

அதையொட்டி பசுமைதாயகம் அருள் எழுதியுள்ள விளக்கத்தில், இந்திய அளவிலான ஒரு மாற்றத்துக்குக் காரணமாக ஒரு தமிழர் இருப்பதா? என்கிற எரிச்சல் காரணமாக பார்ப்பனர்கள் இப்படி உண்மையைத் திரித்திருப்பதாகச் சொல்லுகிறார்.

அவருடைய பதிவில்,

இந்தியா முழுவதும் 90,000 ஆயிரம் சாராயக் கடைகளும், தமிழ்நாட்டில் 3400 சாராயக் கடைகளும், ஏராளமான விடுதி பார்களும் மூடப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியே முதன்மை காரணம் ஆகும். அதற்காக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் உத்தரவின் பேரில் சட்டப்போர் நடத்தி வெற்றிபெற்றவர் வழக்கறிஞ க. பாலு. ஆனால், இதற்கு வேறு யாரோ காரணம் என்று ஊடகங்கள் கொஞம் கூட கூசாமல் எழுதுகின்றன.

தினமலர் வெளியிட்ட செய்தி: “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு உடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார். அவர் சண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து”
தமிழ் தி இந்து வெளியிட்ட செய்தி: “சண்டிகரைச் சேர்ந்த ஹர்மான் சித்து என்பவர் தான் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள், பப்புகளை மூட உத்தரவிடும்படி முதன் முதலில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.”
——————-
“உண்மை என்ன?”
——————-
பாமக வழக்கறிஞர் பாலு வழக்குத் தொடுத்தது 2012 ஆம் ஆண்டில். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு நாள் 25.2.2013. ஹர்மான் சித்து என்பவர் வழக்குத் தொடுத்தது 2013 ஆம் ஆண்டில். பஞ்சாப் உயர்நீதிமன்ற தீர்ப்பு நாள் 18.3.2014.
அதாவது பாலு அவர்கள் வழக்குத் தொடுத்தத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பினை பெற்றதற்கு பின்னர்தான், ஹர்மான் சித்து பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் வழக்கின் தீர்ப்பு அதற்கு அடுத்த ஆண்டு 2014 -இல் தான் வந்துள்ளது.
பாமக வழக்கறிஞர் பாலு அவர்கள் பெற்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துக்கு சென்ற போதுதான் – அந்த வழக்குடன் ஹர்மான் சித்துவின் வழக்கையும் இணைத்து விசாரித்தது உச்சநீதிமன்றம். அதனால் தான், உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே “கே. பாலு வழக்கு” (State of TN vs K. Balu) என்றுதான் தலைப்பிடப்பட்டுள்ளது.
ஹர்மான் சித்துவின் வழக்கினை நாம் மறுக்கவில்லை. பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இதில் முதன்மை வழக்கும், முதல் வழக்கும் பாமக வழக்கறிஞர் பாலு அவர்கள் தொடுத்த வழக்கு மட்டுமே! இந்த உண்மையை ஊடகங்கள் மூடி மறைப்பது ஏன்?

ஊடகங்களில் உள்ள சாதிவெறியர்களின் மன அழுக்கு தவிர, இதற்கு வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response