காற்று வெளியிடை இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (மார்ச் 20) நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் , கார்த்தி , அதீதி ராவ் ஹைதாரி , ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் , பாடலாசிரியர் மதன் கார்க்கி , ஆர். ஜே. பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார்.
விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசியது , 25 வருடம் நானும் ரஹ்மானும் ஒன்றாக பயணித்துள்ளோம் , அவரை நான் சந்தித்தது நேற்று போல் உள்ளது. அப்போது அவரைப் பார்த்தது போல் தான் இப்போதும் உள்ளார். காற்றுவெளியிடை திரைப்படம் இந்திய விமானப் படை பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை ஆகும். நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படபிடிப்புக்கு செல்லும் போதும் அவர்களைப் பார்த்துள்ளேன். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியை சந்தித்த போது “ நான் விமானப் படை அதிகாரியை இப்போது இருக்கும் படப்பிடிப்பு தளத்திருக்கு அருகே எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன் என்றார் “ . அது தான் அவர்கள் . அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தப் படம் இருக்கும். ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இனைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படப்பிடிப்பு உள்ளது பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவரை சந்திக்கச் சென்றால் அவர் தீம் மியூசிக் ரெடி செய்து வைத்திருப்பார். ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்துவிடும். என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையை தேடிப் பிடித்து கொடுப்பவர் அவர். நான் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும் , ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன் . அடுத்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்ற அவரிடம் உங்கள் முன்னால் கேட்டு கொள்கிறேன்என்றார் இயக்குநர் மணிரத்னம்.
விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான பேசியது , இயக்குநர் மணிரத்னம் சார் எனக்கு கிடைத்தது ஒரு வரபிரசாதம் எனலாம். நான் மணிரத்னம் சார் அவர்களை பார்க்கவில்லை என்றால் வைரமுத்து சார் மற்றும் இன்று நான் இருக்கும் இடம் எனக்கு கிடைத்திருக்காது. அவருடன் வேலை பார்ப்பது ஒரு டிவைனான அனுபவம் எனலாம் என்றார்.
விழாவில் சூர்யா பேசியது , மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் இருந்து வந்த சின்ன தயாரிப்பு நான் , நான் ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிக்கும் போது படபிடிப்பு தளத்தில் கூட்டத்தை விலக்கிக் கொண்டு இருந்த கார்த்தி இப்போது அதே மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட்டான் என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயமாகும். இப்போது கார்த்தியின் மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது.கார்த்தியை இதை போல் நான் பார்த்ததே இல்லை , வீட்டில் அனைவருக்கும் கார்த்தியை இந்த இடத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மணி சார் இந்த படத்தில் வேறு ஒரு கார்த்தியை நமக்கு காட்டியுள்ளார்.கார்த்தி இந்த படத்தில் நடித்துள்ளது புதியதொரு கதாபாத்திரம். நான் மணி சாரிடம் ஒன்று கேட்டு கொள்ள விரும்புகிறேன் எப்படி சார் இன்னும் அழகான காதல் கதைகள் உருவாக்கி கொண்டு வருகிறீர்கள் , நான் வீட்டில் இன்னும் பொண்டாட்டி என்ற வார்த்தை பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.
விழாவில் அதீதி ராவ் ஹைதாரி பேசியது , நான் சோசியல் மீடியாவில் தமிழ் மக்கள் அனுப்பும் மெச்செஜ் அனைத்தும் படித்து வருகிறேன். சின்ன வயதில் எனக்கு ஒரு கனவு , எனக்கு மணி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் அந்த கனவு. அந்த கனவு நிஜமாகி உள்ளது . நான் இன்னும் நிறைய கனவு காண்பேன். மணி சாரோடு இனைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய பலம். கார்த்தி ஒரு ஜென்டில்மேன் என்றார்.
விழாவில் நாயகன் கார்த்தி பேசியது , நான் மணி சாரிடம் ஜூனியர் மோஸ்ட் உதவி இயக்குநராக இருந்து ஹீரோவாகிவிட்டேன். எனக்கு இது ஒரு கனவு படம் என்றால் அது பொய்யாக இருக்கும் , என்னென்றால் எனக்கு இப்படி ஒரு நல்ல கனவு வந்ததே இல்லை. நான் யூ.எஸ்யில் படித்துவிட்டு சினிமாவுக்கு செல்கிறேன் என்றதும் எல்லோரும் சொன்னது உனக்கு ஏன் இந்த வேலை என்று தான். பொறியியல் படித்துவிட்டு ஏன் சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று என்னுடைய வெள்ளைக்கார நண்பர்கள் கூட கேட்டார்கள்.நான் மணி சாரிடம் சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அங்கே நிறைய கற்றுக்கொண்டேன். நான் வேலையில் சின்சியராக உள்ளதற்கு காரணம் மணி சாரிடம் வேலை செய்தது தான் காரணம். மணி சார் என்னை நடிக்க சான்ஸ் வந்தால் கண்டிப்பாக நடி என்றார். மணி சார் இந்த படத்தில் நடிக்கச் சொல்லி என்னிடம் ஸ்கிரிப்ட்டை கொடுத்தது எல்லாம் கனவு போல் இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக நான் மீசையை எடுத்த கதையை ஒரு புக்கே போடலாம்.இந்த படத்தில் நான் பைடர் பைலட்டாக வருகிறேன். நான் பைடர் பைலட்ஸ் உடன் ஒரு நாள் முழுவதும் இருந்தேன். இதெல்லாம் இந்த படத்தில் நடிக்க எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. இப்போதும் ஆபிசரை நான் பார்க்கும் போது எழுந்து நின்றுவிடுவேன் . இப்போது நான் மணி சார் ஹீரோ என்பது எனக்கு ஆச்சிரியமாக உள்ளது என்றார். இது ஒரு ஆழாமான எமோஷனல் காதல் கதை என்றார் கார்த்தி.