சகாயம் அறிக்கை வெளியானால் ஓ.பி.எஸ் சிறைக்குப் போவார் – அதிரவைக்கும் புதிய தகவல்

விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கிளியனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மார்ச் 7 ஆம் நாள் காலை 10 மணி அளவில் நடைபெற்றது. அதேபோல் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பகல் 12 மணி அளவில் நடைபெற்றது. கோட்டக்குப்பம் பேரூராட்சி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பகல் 2 மணி கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கிளியனூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். வானூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். கோட்டக்குப்பத்தில் நடந்த கூட்டத்துக்கு கட்சியின் கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார்கள். இந்த கூட்டங்களுக்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இந்த 3 கூட்டங்களிலும் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

அ.தி.மு.க.வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.விடம் விலை போய்விட்டார். மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற கிரானைட் குவாரி மோசடி தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கை வெளியாகுமானால், ஓ.பன்னீர்செல்வம் சிறைக்கு செல்வது உறுதி.

ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா, பின்னர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், ஏற்றுக்கொண்டு உடனடியாக சசிகலாவை ஆட்சி அமைக்க அழைத்திருந்தால், அ.தி.மு.க. இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டிருக்காது.

தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருந்ததால், அவரை உடனடியாக முதல்–அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா கூறினார். ஜெயலலிதா மறைந்த பின்னர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் (ஓ.பன்னீர்செல்வம் உள்பட) சசிகலாதான், தமிழக முதல்–அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

ஆனால் சசிகலா அதனை ஏற்காமல், ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக தொடரட்டும் என்று கூறினார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் நன்றி மறந்து பேசி வருகிறார்.

சசிகலா முதல்–அமைச்சராக வரக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து சதி செய்துவிட்டன. சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளிப்பதை தள்ளி வைத்தது. அந்தநிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்புக்கு சசிகலா வந்தவுடன் அந்த சமயத்தில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்தது. இந்த வி‌ஷயத்தில் தி.மு.க.வின் சதி உள்ளது.

தன்னை வளர்த்துவிட்ட அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம் இனி தனிமரமாகத்தான் இருப்பார். ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, ஒரு போட்டோகூட வெளியிடப்படவில்லை என்று குறைகூறிய தி.மு.க. தற்போது அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் நிலை குறித்து ஒரு போட்டோகூட வெளியிடவில்லையே ஏன்?

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றுபட்டு கடுமையாக உழைத்து கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response