ஒரு வாரம் கழித்து வரும் உச்சநீதிமன்றத்தீர்ப்பு, அவசரச்சட்டத்தை செல்லாமல் செய்யுமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் எரிமலையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவசரச்சட்டமொன்றை நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று சொல்லி, அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று மோடியும் பன்னீர்செல்வமும் சொல்லினர். ஆனால் மக்கள் அதைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. உங்களை நம்பமுடியாது முதலில் சட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று சொல்லிவிட்டனர். இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அவமானத்தை எந்தப் பிரதமரும் சந்தித்திருக்க முடியாது.

இப்போது நிறைவேற்றப்படும் அவசரச் சட்டம் பற்றிய அச்சமும் மக்களிடம் இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் அது, அரசியலமைப்பு ரீதியாகச் செல்லுபடியாகாது என, முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.

தொலைக்காட்சி விவாதங்களில் இதுகுறித்து அவர் குறிப்பிடும்போது, ‘ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காண மத்திய அரசு விரும்புகிறது. அது நல்லது தான். ஆனால், இதுபோன்ற சூழல்களில் அவசரச் சட்டம் தேவையற்றது.

நெருக்கடியான காலகட்டத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் மட்டுமே அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் படி செல்லுபடியாகும் என நான் நினைக்கவில்லை. எனினும், என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்’ என்றார்.

அவர் இப்படிச் சொல்லியிருப்பது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்கக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை வைத்தது. அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சுமுகத் தீர்வு எட்ட மாநில அரசுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதால் இவ்வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு அளிக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இம்முடிவை எடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பில்லை என இசைவு தெரிவித்திருக்கும் இந்நேரம்தான் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

இச்சட்டத்தின்படி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சியுடன் போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள்.

அதன்பின் ஓரிருநாட்கள் கழித்து வெளியாகும் உச்சநீதிமன்றத்தீர்ப்பு அதையும் செல்லாது என்று சொல்லிவிடலாம். அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லமுடியா வண்ணம் பன்னீர்செல்வத்தின் பேட்டி இருக்கிறது.

தில்லியிலிருந்து சென்னை வந்து விமான நிலையத்தில் கொடுத்த பேட்டியின் போது, அவரிடம், ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? என்று கேட்டதற்கு,

ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் செய்கிறோம். அது மாதிரியான தடை இனி வருவதற்கு வாய்ப்பு இல்லை. எந்த தடை வந்தாலும் அதை சட்டத்தின் மூலம் நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று பதில் அளித்தார்.

தடை வரவே வராது என்று அவரால் சொல்லமுடியவில்லை.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் பற்றியுள்ள போராட்டத்தீயை அணைக்கவே அவசரச் சட்டம் இயற்றப்படுகிறது என்கிற மாணவர்களின் ஐயம் சரிதான் என்று சொல்கிறார்கள்.

Leave a Response