தூத்துக்குடி பிரான்சினா படுகொலைக்கு நாமும் காரணம் – சிந்திக்க வைக்கும் எழுத்தாளர்

அண்மையில் ஒருதலைக்காதல் சிக்கலால் பல இளம்பெண்கள் அடுத்தடுத்து பாதிப்புக்காளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் உயிரழக்கவும் நேரிட்டிருக்கிறது. திடீரென இளைஞர்கள் எல்லாம் இப்படி மாறிப்போக என்ன காரணம் என்பதை, ஐந்து முதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், வெண்ணிற ஆடை போன்ற நாவல்களை எழுதியிருக்கும் எழுத்தாளர் சரவணன் சந்திரன் விளக்குகிறார். அவருடைய பதிவில்….

கடந்த இரண்டு நாட்களில் ஒருதலைக் காதலால் நடந்த நான்கு சம்பவங்களை சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. கரூரில் சோனாலி என்கிற மாணவி கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரான்சினா என்கிற ஆசிரியர் தொழில்புரிந்த பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். திருச்சியைச் சேர்ந்த மோனிகா என்கிற மாணவி கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருத்தரும் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். இந்த நான்கு சம்பவங்களும் இன்னொரு ஆழமான உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் காதல் தோல்வியில் வருபவர்கள் கழிவிரக்கத்தில் கசிந்து உருகுபவர்களாக இருந்தார்கள். உச்சகட்டமாக காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். தான் காதலித்த பெண்ணொருத்தியைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமென ஒரு பையன் பேச்சுவார்த்தைக்கு வந்தான். அந்தப் பெண் அவன் வேண்டவே வேண்டாம் என விடாப்பிடியாக மறுத்தாள். தற்செயலாக அந்தப் பையனைச் சோதித்த போது, அவனது பாக்கெட்டிற்குள் கத்தியை மறைத்து வைத்து எடுத்து வந்திருந்தது தெரியவந்தது.

ஏன் இப்படி எனக் கேட்ட போது, “எனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது. அவள் மறுத்தால், அவளைக் கொன்றுவிட வேண்டுமென்கிற திட்டத்தில் ஏற்கனவே இருந்தேன். ஏதாவதொரு விதத்தில் அவளைப் பழிவாங்க வேண்டும் எனத் தோன்றிக் கொண்டே இருக்கிறது” என்றான். பேச்சுவார்த்தைக்கே கத்தியைக் கொண்டு வரும் திட்டத்தில் இருந்தவனிடம் மனநிலை எப்படிச் செயல்பட்டிருக்கும்? அதேபோல் இன்னொரு பெண் தொடர்ந்து ஒரு பையனின் குடும்பத்தை வம்பு வழக்குகள் என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தார். என்ன காரணம் என்று விசாரித்த போது, அந்தப் பெண் தனக்கு செட்டாக மாட்டாள் என்று கருதி, அந்தக் காதலைத் தவிர்த்திருக்கிறான் அந்தப் பையன். அந்தப் பையனை இன்னொரு திருமணமும் செய்யவிடாமல், தனக்கிருக்கிற சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்தி அந்தப் பெண் சீரழித்துக் கொண்டிருந்தார். ஏன் என்று கேட்ட போது, “அவன் என்னை மறுத்துவிட்டு இன்னொரு பெண்ணோடு வாழ்வதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அவனைப் பழிவாங்க வேண்டும். அப்போதுதான் என்னால் நிம்மதியாக உறங்க முடியும்” என்றார்.

காதல் தோல்வியில் எங்கிருந்தாலும் வாழ்கவென கழிவிரக்கம் கொண்டு தாடி வளர்த்த கூட்டமும், காதல் தோல்வியில் தன்னை மாய்த்துக் கொள்வேனே தவிர, அவன் நன்றாக வாழட்டும் என்று நம்பிய கூட்டமும் இப்போது எங்கே போனது? பழிவாங்க வேண்டும் என்கிற உணர்ச்சிகளுடன்கூடிய ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நம்பாமல் கடந்து போக விரும்புகிறோம். வெறும் மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே கல்வியாகக் கருதும் பெற்றோர்களும் அதற்கு தலையை ஒப்புக் கொடுத்து தன்னை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறைக் குழந்தைகளும் அடிப்படையான மனிதச் சகிப்புத்தன்மை என்பதையே இழந்தபடி இருக்கிறார்கள். தன்னுடைய பொருளைத் தெரியாமல் எடுத்துப் பயன்படுத்திய சகோதர சகோதரிகளுக்கிடையிலேயே பழிவாங்கும் உணர்ச்சி என்பது தலைதூக்குகிறது. நம்முடைய சகோதரிதானே? சகோதரன்தானே? என்கிற புரிதல் இல்லாமல், சகிப்புத்தன்மையே இல்லாத தலைமுறையாக அது தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இது எல்லா வீட்டிலும் நடக்கக்கூடியது என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள். சின்னச் சின்னப் பிரச்சினைக்குக்கூட விவகாரத்திற்காக நீதிமன்றங்களை எத்தனை பேர் நாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அங்கே ஒருமுறை போய்ப் பாருங்கள், தெரியும். சகிப்புத் தன்மையுடன் கூட்டாக வாழத் திராணியற்ற ஒரு தலைமுறையை செல்லம் கொடுத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இது அடிப்படையான பிரச்சினை. பள்ளிகள் மட்டத்திலிருந்து சரிசெய்ய வேண்டிய பிரச்சினை. மதிப்பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை குணாதிசயங்களை வடிவமைக்கும் விஷயத்திற்கும் கொடுக்க வேண்டும்.

அதைப் பள்ளிகள் ஒருபோதும் செய்யப் போவதில்லை. அப்படியானால் வீட்டில் செய்ய வேண்டுமே? ஆனால் செய்யும் நிலையில் இருக்கும் பெற்றோர்கள்கூட சகிப்புத்தன்மை இல்லாமல் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைக் குழந்தைகள் பார்க்கவும் செய்கின்றனர். என்னுடைய அப்பாவை என்னுடைய அம்மா தினமும் அவமானப்படுத்துகிறார் என்று சொல்லி வந்த குழந்தைகளும் இருக்கிறார்கள். என் அம்மாவை என்னுடைய அப்பா தவறான தொடர்பு இருக்கிறது என்று சொல்லி தினமும் வார்த்தைகளால் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி வந்த குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆக, இது அடிப்படியான ஒரு தலைமுறைக்கான பிரச்சினை. பழிவாங்குவதில் தப்பில்லை என்று நம்பும் தலைமுறையாக அது இருப்பதுதான் பிரச்சினை. தன்னுடைய பொம்மையை எடுத்து விட்டான்/டாள் என்பதற்காக அவளைக் கீழே தள்ளிவிட்டு பழிவாங்கும் போது ரசித்துச் சிரிக்கிறோம். ஆனால் அதுதான் இன்னொரு சந்தர்ப்பத்தில் கத்தியாகவும் அரிவாளாகவும் வம்பு வழக்குகளாகவும் மாறுகிறது. இந்த நான்கு சம்பவத்திலும் சம்பந்தப்பட்ட இளைஞர்களும் கொலைத் தொழிலில் பட்டம் பெற்ற இளைஞர்கள் இல்லை. அவர்களும் நமக்குத் தெரிந்த குடும்பத்துப் பையன்களே. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் நம்முடைய குடும்பத்துப் பையன்களாகவும் அவர்கள் இருக்கக்கூடும். இது ஒரு எச்சரிக்கை என்பதைக் கல்விப் புலங்கள் உணர வேண்டும். அதைவிட பெற்றோர்கள் உணர வேண்டும்.

சகிப்புத்தன்மையற்ற நிலையும், பழிவாங்கும் உணர்ச்சியும் ஒரு தடாலென்ற கணத்தில் வானத்தில் இருந்து குதிப்பதல்ல. அதுபடிப்படியாக வளரும் தன்மை கொண்டது. அதை மறைமுகமாக குடும்பமும் இந்தச் சமூகமும்தான் வளர்த்தெடுக்கிறது. அந்த வகையில் இந்தக் கொலைகளுக்கு நாமும் ஒருவகையில் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

Leave a Response