தர்மதுரை – திரைப்பட விமர்சனம்

தேனி மாவட்டத்திலுள்ள ஒரு சின்ன கிராமத்திலிருந்து மதுரை வந்து மருத்துவம் படித்து. மருத்துவத்தைப் பணமாக்க வேண்டும் என்று எண்ணாமல், மக்கள் சேவையாகச் செய்யும் ஒரு நல்லவர் தர்மதுரை.
அவருக்குக் ஏழைப்பெண் மீது காதல். பணத்தாசை பிடித்த அவருடைய சகோதரர்களால் காதலித்தவரைக் கரம்பிடிக்க முடியா சோகத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிறார்.

ஒருகட்டத்தில் வீட்டில் இருக்கும் மொத்தப்பணத்தையும் எடுத்துக் கொண்டு ஊரைவிட்டே செல்கிறார். சென்றவர் என்னவானார்? பணத்தை இழந்த அவர் குடும்பம் என்னவாகிறது? என்பதுதான் படம்.

தேனி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தை பறவைபோல பறந்து காட்டி படத்துக்குள் அழைத்துப் போகிறார்கள்.

மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசி அனைவரையும் கவர்கிறார் விஜய்சேதுபதி. மாணவராக, மருத்துவராக, காதலராக, குடிகாரராக எனப் பல பரிமாணங்கள் அவருக்கு, அவ்வளவையும் மிகச் சாதாராணமாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.

தமன்னா,கிராமத்துக்கதையில் கொஞ்சம் அந்நியமாய்த் தெரியும்   வெள்ளை அழகி, தன் நடிப்பால் கவர்ந்துவிடுகிறார். விஜய்சேதுபதி மீதான காதலை எங்கும் அவர் சொல்லவே இல்லை. ஆனால் அவருடைய ஒவ்வொரு அசைவும் காதலைச் சொல்லுகிறது.

சிருஷ்டிடாங்கே, ஐஸ்வர்யாராஜேஷ் ஆகிய இருவரும் தங்களுக்குக் கிடைத்த பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

அம்மாவாக ராதிகா நடித்திருப்பதால், ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் யானைப் பசிக்கு சோளப்பொறி மாதிரி அவருடைய பாத்திரம் அமைந்துவிட்டது.

ராஜேஷ், படத்தொகுப்பாளர் காசிவிஸ்வநாதன், அருள்தாஸ், செளந்தர்ராஜா,  கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட நடிகர்கள் தேர்வு பொருத்தமாக இருக்கிறது.

சுகுமாரின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பு. யுவன் பின்ன்ணியில் இசையில் கவனிக்க வைக்கிறார்.

கதை நடக்கும் காலகட்டத்துக்கேற்ற தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு இல்லாமல் இருப்பது உள்ளிட்ட  குறைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

மதிய உணவுக்காகப் பள்ளிக்கூடம் போனவன் என்று சொல்லும் ராஜேஷின் கதாபாத்திரம் மூலம் இன்றைக்கு முற்றாக அற்றுப்போயிருக்கும் அறத்தைச்சொல்லியிருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க நினைக்கும் இயந்திரமாக இல்லாமல் மக்கள் சேவையாளர்களாக இருக்க்வேண்டும் என்கிற நல்ல கருத்தை தான் வாழ்ந்து பழகிய கிராமத்து வாசம் பூசி கொடுத்திருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

Leave a Response