கபாலி – ரஜினியின் குற்றமும் ரசிகர்களின் குற்றமும்!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் பல்வேறு சர்ச்சைகளுக்கும் மத்தியில், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஜூலை 22 வெள்ளியன்று வெளியானது.

இப்படம் வெளியான அதே நாளில் சில இணையதளங்களிலும் அப்படம் வெளியானது. ரசிகர்கள் உற்சாகமாக வீட்டில் (கணினி மற்றும் இணைய இணைப்பு உள்ளவர்கள்)  இருந்தே படம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

நூற்றுக்கணக்கானவர்களின் வருடக் கணக்கான உழைப்பு மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளைத் திருடிக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வு சிறிதுமின்றி படம் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

இப்படத்துக்கான விளம்பரங்கள் மிக அதிகம் என்பதாலும் படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த் என்பதாலும் படத்தை முதல்நாளிலேயே பார்த்துவிட வேண்டும் என்று விரும்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

இதைச் சரியாகப் புரிந்துகொண்ட வியாபாரிகள், தொடக்கத்திலேயே எல்லாத் திரையரங்குகளிலும் நுழைவுச்சீட்டுகளைப் பதிவு செய்து கொண்டனர். அதோடு நிறைய தொழில்நிறுவனங்கள், தம் தொழிலாளர்களுக்காக  மொத்தமாக நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இக்காராணங்களால்,முதல் நாளன்றே படம் பார்க்க விரும்பிய   திரைப்பட ரசிகர்களுக்கும், முதல்நாள் முதல் காட்சி பார்த்துவிடுவதையே பெருமையாகக் கருதும்  ரஜினி ரசிகர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.

தினம் நூறு, இருநூறு சம்பாதிக்கும் கூலித் தொழிலாளர்கள் ஐநூறு ஆயிரம் கொடுத்து நுழைவுச்சீட்டைப் பெறவேண்டிய அவலம் ஏற்பட்டுவிட்டது.

இதனால் பல இடங்களில் ரஜினி ரசிகர்களே  ரஜினியின் உருவம் பதித்த பதாகைகளைக் கிழித்தெறிந்த நிகழ்வுகளும் நடந்தன. திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு அவற்றை அதிக விலைக்கு விற்கும் நிலை மாறி திரையரங்குகளே அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் தரப்பே, ஒரு பகுதியின் வசூல் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ளாமலேயே, திரையிடும் உரிமைக்காகப் பெரும்தொகையை வாங்கிக் கொண்டதுதான் என்கிறார்கள்.

இதன்விளைவாக நுழைவுச்சீட்டு விலை அதிகமானது. இதனால் வெறுப்புற்றிருந்த ரசிகர்கள், இணையத்தில் ப்டம் வெளியாகிவிட்டது என்றதும் மகிழ்ச்சியாக அதை வரவேற்று ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இது தப்பில்லையா? என்று கேட்டவர்களிடம் குமுறிவிட்டார்கள், நூற்றிருபது மதிப்புள்ள நுழைவுச்சீட்டை ஆயிரம், இரண்டாயிரம் என்று விற்கிறார்கள், அதை நிறுத்தச் சொல்லி நீதிமன்றம் போனால், மக்களே விரும்பி அதிக விலை கொடுக்கிறார்கள் என்று நீதிபதி சொல்கிறார். படத்தின் தயாரிப்பாளரோ ரஜினிகாந்த்தோ, நுழைவுச்சீட்டை அதிக விலைக்கு விற்காதீர்கள் என்று சொல்லவே இல்லை. மாறாக, அவர்களுக்குத் தெரிந்துதான் இவ்வளவும் நடக்கிறதென்று சொல்கிறார்கள் அப்படி அவர்கள் தப்புக்கு மேல் தப்பு செய்யலாம், நாங்கள் எங்கள் வீட்டுக்கு வருகிற இணையத்தில் தெரிகிற படத்தைப் பார்த்தால் தப்பா? என்று பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

அதுமட்டுமின்றி தயாரிப்பாளருக்கு சவால் விட்டு படத்தை வெளியிட்ட இணையதளக்காரர்களை அநீதிக்கு எதிரான போராளிகள் என்று பாராட்டுகிற அளவுக்குப் போய்விட்டார்கள்.

கபாலி படக்குழுவினர், நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை அதிக விலைக்கு விற்றது அல்லது அதற்கு உடந்தையாக இருந்ததும் குற்றம்.
அதேபோல் இணையதளத்தில் படத்தை வெளியிட்டதும் குற்றம்.

இவ்விரண்டும் சமமானதா?

நிச்சயம் இல்லை, நுழைவுச்சீட்டு அதிக விலைக்கு விற்பவர், அதற்கு உடந்தையாக இருப்பவர் ஆகிய எல்லோரும் நம் கண்முன்னே இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராகப் போராடலாம், நீதிமன்றம் போகலாம், கேள்வி கேட்கலாம், எங்காவது சரியான நிர்வாகி இருந்தால் இந்தக் குற்றவாளிகளுக்கு அதற்கான தண்டனை கூட கிடைக்கலாம்.

ஆனால், படத்தை இணையத்தில் வெளிட்டவர்கள் காற்றில் கரைந்திருக்கிறார்கள். அவர்கள் யாரென்று கூட நமக்குத் தெரியாது. அதனால் அவர்கள் மீது நடவடிக்கை என்பது நடைமுறை எதார்த்தம் இல்லை.

அப்படி இருக்கும்போது இரண்டு குற்றங்களையும் சமமாகப் பாவிப்பது எப்படிச் சரியாகும்?

அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களிடம் இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று சில ரசிகர்கள்  நியாயம் சொல்வீர்கள், அவர்களிடம் ஒரு கேள்வி?,  அதனால்தான் இப்படிச் செய்கிறோம் இதனால் எங்களுக்குத் தனிப்பட்ட பலன் இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்வார்களா?

அவர்களுக்கு இந்தப்படம் மட்டுமில்லை எந்தப்படம் வந்தாலும் இதேவேலைதான், பல நூறு பேரின் உழைப்பையும் பல கோடி மதிப்புள்ள பொருளைத் திருடி குறைந்த விலைக்கு விற்பதுதான் அவர்கள் வேலை.  ஒவ்வொரு படக்குழுவினரும் தங்கள் பொருள் கண்முன்னே திருடப்படுவது கண்டு கதறுகிறார்கள்.

ரஜினி குற்றம் செய்தார் என்பதற்காக ரஜினி ரசிகர்களும் குற்றம் செய்திருக்கிறார்கள்.

ரஜினி வீட்டு முன் ரசிகர்கள் போராடலாம், ரசிகர் வீட்டு முன் ரஜினி போராட முடியுமா?

Leave a Response