தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை – யாழ்ப்பாணத்தில் தமிழ் அமைச்சர் பேச்சு

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், திருமுறைகள்< சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய
அத்தனை நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே எங்களிடம் கையளிக்கப்பட்டன.

தமிழை வளர்த்தது பனை. பனை இல்லாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இவ்வளவு வளங்களும் வந்து சேர்ந்திராது.

தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது எமது கடமை என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பனை அபிவிருத்தி வாரத் தொடக்க நிகழ்ச்சி, (22.07.2016) வெள்ளிக்கிழ்மை, யாழ் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் க்லந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு கூறீனார்.

அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,

பனையே எல்லாமுமான வாழ்வு தமிழருக்கு இருந்தது. பனையின் முடி முதல் அடி வரை எங்களுக்குப் பயன் தந்தது.

வருடம் முழுதும் பயன்தந்தது. மணற்காடாக இருந்த யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் குடியேறக் காரணமாக இருந்தது இந்தப் பனை வளம்தான்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக பனைத்தொழில் செய்வோரை குறிப்பிட்ட ஒரு சமூகமாக நாம் ஒதுக்கியதுபோல பனை மரத்தையும் ஒதுக்கிவிட்டோம்.

ஒரு காலத்தில் பருவத்துக்குப் பருவம் பசளைகளாகப் பயன்படுத்துவதற்காக ஓலைகள் வெட்டப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டதுபோல கம்பீரமாகக் காட்சியளித்த பனை மரங்கள் இன்று தீண்டுவாரற்று காவோலைகளுடன்
தலைவிரி கோலமாகக் காணப்படுகின்றன.

இந்நிலை மாற வேண்டும். வடக்கின் பொருளாதாரத்தைக்கட்டியெழுப்பும் தூண்களில் ஒன்றாக மீண்டும் பனை மரங்கள் நிமிர வேண்டும். இதற்கு பனை
உற்பத்திகளைப் பயன்படுத்தவும் நவீன காலத்துக்கு ஏற்ப பனைசார் உற்பத்திகளை நுகர்வோரைக் கவரும்வகையில் அபிவிருத்தி செய்யவும் சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், வே.சிவயோகன், க.தர்மலிங்கம்,

கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார்,
விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர், க.சுசிந்திரன் ஆகியோருடன் பல்வேறு திணைக்களங்களைச் சார்ந்த அதிகாhpகளும் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Leave a Response