ஒரு இலட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை – காரணம் என்ன?

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 இலட்சத்தைத் தாண்டி ரூ.1,001,20 என வரலாற்று உச்சத்தைத் தொட்டது.வெள்ளி விலையும் கடுமையாக அதிகரித்து வருகிறது.

செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது.வழக்கமாக காலையில் மட்டும்தான் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் என்பது இருக்கும்.ஆனால், இந்த மாதங்களில் காலை,மாலை என ஒரு நாளைக்கு 2 தடவை உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் படைத்தது.அதுவும் தினம், தினம் புதிய உச்சம் கண்டு வரலாற்று உச்சத்தை தொட்டு வந்தது.

தொடர்ந்து கடந்த மாதத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்து இருந்தது.இந்தநிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.அந்தவகையில் தங்கம் விலை ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் அப்படியே இருந்து வந்தது.

தொடர்ந்து 11 ஆம் தேதி வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2000 அதிகரித்து,பார் வெள்ளி ரூ.2 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இது,இதுவரை இல்லாத புதிய உச்சம்.
இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.207 க்கும், பார் வெள்ளி ரூ.2 இலட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கிடு,கிடுவென உயர்வை சந்தித்தது.அதாவது அன்றைய தினம் தங்கம் விலை காலையில் பவுனுக்கு ரூ.1,600, மாலையில் பவுனுக்கு ரூ.960 என ஒரேநாளில் பவுனுக்கு ரூ.2,530 உயர்ந்து ஒரு பவுன் ரூ.98,960க்கு விற்பனையானது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை காலை, மாலை என கிலோவுக்கு ரூ.7 ஆயிரம், உயர்ந்து பார் வெள்ளி ரூ.2.16 இலட்சத்துக்கு விற்பனையானது. இதுவும் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சம் கண்டது.

தொடர்ந்து 13 ஆம் தேதி சனிக்கிழமை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் வெள்ளி விலை மட்டும் கிலோவுக்கு ரூ.6 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.10 இலட்சத்துக்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு நேற்று சந்தை தொடங்கியது. அதுவும் வார தொடக்க நாளிலேயே தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது.

அதாவது நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,680க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையும் நேற்று காலை அதிரடியாக உயர்ந்தது.வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.213க்கும், கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை பவுன் ரூ.1 இலட்சத்தை தொட்டு விடுமோ? என்ற கவலை நகை வாங்குவோரிடையே இருந்து வந்தது. அந்தக் கவலை நேற்று பிற்பகலில் நிருபணமானது. நகை வாங்குபவர்கள் கவலைப்பட்டதைப் போலவே தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 இலட்சத்தைக் கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. அதாவது,நேற்று பிற்பகலில் 2 ஆவது முறையாக தங்கம் விலை உயர்ந்தபோது இந்த புதிய உச்சத்தைத் தொட்டது. நேற்று பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,515க்கும், பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1,00,120 க்கும் விற்பனையானது.

இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது.நேற்று பிற்பகலில் வெள்ளி விலையும் உயர்ந்தது.நேற்று பிற்பகல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2.15 இலட்சத்துக்கும் விற்பனையானது.

இது குறித்து நகை வியாபாரிகள் கூறுகையில்….

தங்கத்தின் விலை தினமும் கூடும் என்று சொல்லமுடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக உயரக்கூடும்.ஒருநாள் கூடினால் மற்றொரு நாள் குறைகிறது.ஆனால் விலை உயர்வுக்கு ஏற்ற அளவு குறையாது.ஒட்டுமொத்தமாக பார்த்தால் தற்போது போர்ப்பதட்டம் இல்லாத சூழலிலும் தங்கம் விலை உயருகிறது.பொருளாதார மற்றும் வர்த்தகப் போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.மேலும் டாலருக்கு நிகரான இந்தியப்பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

சர்வதேச அளவில் பொருளாதாரப் போட்டி அதிகரித்து வருவதால் மற்ற பொருட்களில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், லாபகரமாகவும் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் தங்கம், பண்ட மாற்றுப்பொருளாக மாறவும் வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை கூடினாலும் வியாபாரம் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றனர்.

தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சம் தொட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது…..

இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்ததற்கு சர்வதேச அளவில் நிலவும் பதற்ற நிலையும் பொருளாதார வளர்ச்சி குறித்த ஸ்திரத்தன்மையற்ற நிலையும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்தநிலை காரணமாக பாதுகாப்பு கருதி மத்திய வங்கிகளும், உலக அளவிலான பல்வேறு அமைப்புகளும் தங்கத்தில் அபரிமிதமாக முதலீடு செய்வதால் தேவை அதிகரித்துள்ளது.

இதுமட்டுமின்றி, சர்வதேசச் சந்தையில் தங்கம் வாங்கும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும், வரிகளும்,பரிமாற்றக் கட்டணங்களும் தங்கம், வெள்ளி விலையை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நடப்பு ஆண்டில் தேவைக்காக மட்டுமின்றி முதலீட்டுக்காகவும் தங்கம் வாங்குவது தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை சந்தையால்தான் முடிவு செய்யப்படுகிறது. இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை.அதேநேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியும் ஒன்றிய அரசும் தங்கம், வெள்ளி இறக்குமதியை முறைப்படுத்தியுள்ளன. இதன்மூலம் தங்கம் கடத்தல் குறைவதோடு, விலையைக் கண்காணிக்க உதவுகிறது.

நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.2,38,590 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.28,890 கோடி மதிப்புக்கு வெள்ளியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.4,98,800 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.41,452 கோடி மதிப்பிலான வெள்ளியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல், கடந்த நிதியாண்டு முடிவில், அதாவது, கடந்த மார்ச் 31 ஆம் தேதி ரிசர்வ் வங்கியிடம் 879.58 டன் தங்கம் இருப்பு இருந்தது. இதுபோல், 2023-24 நிதியாண்டு முடிவில், அதாவது கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிப்படி 57.48 மெட்ரிக் டன் தங்கம் இருப்பு இருந்தது. இதன்படி, ஓராண்டில் ரிசர்வ் வங்கியிடம் தங்கம் இருப்பு 57.48 மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது

இவ்வாறு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

தங்கம் விலை ஓராண்டில் உயர்ந்து வந்த விவரம்:

சனவரி 1 ஆம் தேதி ரூ.57200

பிப்ரவரி ரூ.61960

மார்ச் ரூ.63520

ஏப்ரல் ரூ.68160

மே ரூ.70200

ஜூன் ரூ.71600

ஜூலை ரூ.72160

ஆகஸ்ட் ரூ.73200

செப்டம்பர் ரூ.77640

அக்டோபர் ரூ.87120

நவம்பர் ரூ.90480

டிசம்பர்(நேற்று) ரூ.100120

கடந்த 5 ஆண்டில்…

2021 ரூ.37,272

2022 ரூ.41,040

2023 ரூ.47,800

2024 ரூ.59,640

2025 ரூ.1,001,20

இந்த விலை உயர்வு தங்கநகைப் பிரியர்களுக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.திருமண வயதில் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave a Response