18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்,தற்போது ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு என்று கூறி இணையத்தில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது.அந்தத் தகவலின்படி பாஜக கூட்டணிக்கு 214 இடங்கள் தாம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 214 இல் மட்டுமே பாஜக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்கருத்துக் கணிப்பில், தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆந்திரா உட்பட 14 மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாஜக கூட்டணியினரால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 9, உ.பியின் 80 தொகுதியில் 65, ம.பியில் 29 இல் 24, குஜராத் 26 இல் 23, இராஜஸ்தானில் 25 இல் 16, மகாராஷ்டிராவில் 48 இல் 11, மேற்கு வங்கத்தில் 42 இல் 9, கர்நாடகவில் 28 இல் 6, தெலங்கானாவில் 17 இல் 1, பஞ்சாபில் 13 இல் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிவரும் நிலையில், இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நேற்று இரவு வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.