அமித்ஷா வருகை திடீர் இரத்து – இதுதான் காரணம்?

18 ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5 ஆம் தேதிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, அமித்ஷாவின் சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், இராமநாதபுரத்தில் பாஜகவின் கூட்டணி வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களை ஆதரித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரை செய்யத் திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வருவதாகவும், தேனி, இராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாகச் சென்று ஆதரவு திரட்டும் அவர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்திலும் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உடல்நலக்குறவு காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், நாளையும், நாளை மறுநாளும் அமித் ஷா கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அவருடைய சுற்றுப்பயணத்திட்டம் திடீர் இரத்துக்கு வேறொரு காரணமும் அரசியல் வட்டாரங்களில் உலவுகிறது.

அது என்னவெனில்?

இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான, அதாவது 80 நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம்.அங்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இந்த மாநிலத்தைத் தான் இந்தத் தேர்தலிலும் பாஜக முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் உத்தரபிரதேச பாஜக கட்சியில் உட்கட்சிப் பூசல் தலைவிரித்தாடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அங்கு பாஜக பெரும் சரிவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் பெரிதாக நம்பிக் கொண்டிக்கும் உத்தரபிரதேசம் பாஜகவுக்குப் பின்னடவை ஏற்படுத்தும் என்பதால் அமித்ஷா, தமிழ்நாடு பரப்புரையை இரத்து செய்து விட்டு உத்தரபிரதேசத்துக்குச் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது.உத்தரபிரதேசத்தைப் பொறுத்தவரை முதல் கட்டத்தில் 8 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடக்கிறது. அப்படி இருந்தும் நம்பிக்கையான மாநிலமான அங்கு பாஜக பின்னடைவைச் சந்தித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும் சரிவை ஏற்படுத்திவிடும்.

எப்படியும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது.இருக்கும் மாநிலத்தையாவது தக்க வைக்க வேண்டும் என்றே அமித்ஷா உத்தரபிரதேசத்தை நோக்கி புறப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் தமிழ்நாடு பரப்புரையை இரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இரண்டு நாட்களும் இரத்து என்று சொன்னார்கள்.அதன்பின், இன்று இரவு 11.30 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா, இரவு அங்கு தங்குகிறார். காலையில் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.நாளை காலையில், சிவகங்கை தொகுதிக்குட்பட்ட காரைக்குடியில் பரப்புரை செய்கிறார். அங்கிருந்து தென்காசி செல்கிறார். அங்கு ஜான்பாண்டியனை ஆதரித்து பரப்புரை செய்து விட்டு, நாகர்கோவில் செல்கிறார். அங்கு பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

SHARE 0

Leave a Response