தமிழ்நாட்டு மக்களை மோடி ஏமாற்றுகிறார் – நடிகை ரோகிணி பேச்சு

18 ஆவது மக்களவைக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது.

இத்தேர்தலில் இந்திய ஒன்றிய அளவில் அமைந்துள்ள இந்தியா கூட்டணி,தமிழ்நாட்டில் திமுக தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து சமுதாயச் செயற்பாட்டாளரும், நடிகையுமான ரோகிணி பரப்புரை மேற்கொண்டார்.

ஏப்ரல் 1 ஆம் தேதியன்று மதுரை, ஜெய்ஹிந்த்புரம், திடீர் நகர், சொக்கலிங்க நகர் பகுதிகளில் அவர் பரப்புரை செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது….

எளிய மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிராலிக்க கம்யூனிஸ்ட்டுகளின் பலம் அதிகரிக்க வேண்டும். அதன்படி சு.வெங்கடேசன் எளிய மக்களின் வேட்பாளர். அவரை மதுரை வாக்காளர்கள் மீண்டும் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

பிரதமர் மோடிக்கு பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருப்பதைச் சொல்லியுள்ளார். ஆனால்,பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் கொடுக்கவேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாடு அச்சுறுத்தலைச் சந்திக்கும் நிலையில் தற்போதைய தேர்தல் மிக முக்கியமானது. நாட்டில் ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் உறுதிப்படுத்த இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

தமிழ்நாடு மழை, வெள்ளத்தால் பாதித்த போது வராத பிரதமர் மோடி, அதற்காக ஒரு பைசா நிதி கூட வழங்காத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் காலம் என்பதால் தமிழ்நாட்டுக்கு வாக்கு கேட்டு மட்டுமே வருகிறார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். மக்கள் தெளிவாக இருப்பதால் அதற்குப் பாடம் புகட்டுவர்.

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்போக்குடன் அணுகுகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யக் கூடாது என்ற முடிவோடு இருக்கிறார் அவர். பாஜகவினர் தேர்தல் பத்திரம் மூலம் பல ஆயிரம் கோடி நிதி திரட்டி ஊழல் செய்துள்ளனர். தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகை ரோகிணி பரப்புரையில் ஈடுபட்டபோது ஏராளமானோர் வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் அவருக்கு அதிக அளவில் உற்சாகத்துடன் வரவேற்பு கொடுத்தனர்

Leave a Response