இந்திய ஒன்றியத்தின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தெதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதிவரை ஏழுகட்டங்களாக நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரேகட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தேர்தலில் நான்குமுனைப் போட்டி உருவாகியுள்ளது. திமுக தலைமையில் இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணி, பாஜக தலைமையில் மூன்றாவது கூட்டணி ஆகியனவற்றோடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் தனியாகக் களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி.
இப்போது இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் சேரன் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில்,திருச்சி நாளாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாகச் செல்லும் காணொலி அடங்கிய பதிவை தன்னுடைய பக்கத்தில் மறுபதிவிட்டு,
நாம்தமிழர்கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் சொல்லும்படியான தனி அடையாளங்களோடு இருப்பதும் செயல்படுவதும் வரவேற்கத்தக்கது. அரசியலில் புதிதாய்ப் பாய்ந்திருக்கும் மழைவெள்ளமாய்க் களமிறங்கியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.படித்தவர்களாகவும் சமூக அறிவு படைத்தவர்களாகவும் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான பல்வேறு பதிவுகளை மறுபதிவிட்டு வருகிறார்.இதன்மூலம் இத்தேர்தலில் அவருடைய ஆதரவு எங்கள் கட்சிக்குத்தான் என்பது தெளிவாகியுள்ளதெனக் கூறி அவற்றை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.