அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் அந்தத் தேர்வுகள் முடிவடைகின்றன. அதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 9 இலட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர். இவர்களில் 4 இலட்சத்து 57 ஆயிரத்து 525 பேர் ஆண்கள். 4 இலட்சத்து 52 ஆயிரத்து 498 பேர் பெண்கள். மாற்றுப் பாலினத்தவர் 1. இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் பங்கேற்கின்றனர்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடக்கும்.28 ஆம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 1 ஆம் தேதி கணக்கு, 4 ஆம் தேதி அறிவியல், 6 ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம், 8 ஆம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும்.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 க்கு முடியும். தேர்வின்போது வழக்கமாக அனுமதிக்கப்படும் 15 நிமிடம் இந்தத் தேர்விலும் உண்டு.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் கைபேசி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. முறைகேடுகளில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Leave a Response