ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விளக்கிக் கூறினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது…..
தமிழ்நாட்டிற்கு பாஜக தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வருகிறது. நாம் கேட்ட எந்த நிதியும் அவர்கள் தரவில்லை. இதைச் சுட்டிக்காட்டி 6 முறை நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேசினார்.பாஜகவின் தோல்வி முகத்தை கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிகழ்வுகளைக் கொண்டு நாம் அறிய முடியும்.
வடகிழக்கு மாநிலம் என 7 மாநிலங்களைச் சொல்வார்கள்.அவற்றில், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக போட்டியிடாது,மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என அறிவித்துள்ளனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமல்ல, வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களிலும் பாஜக டெபாசிட் பெற முடியாது என்ற காரணத்தை உணர்ந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் 3 இல் இருந்து விலகி உள்ளனர்.போகப்போக எத்தனை மாநிலங்களில் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறோம் எனச் சொல்வார்களோ தெரியாது.பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் வதோதரா மற்றும் சம்பர்கந்தா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், ரஞ்சன்பென் பட் மற்றும் பிகாஜி தாக்கூர் ஆகியோர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு அர்த்தம், தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை. வெற்றி பெறாத இடத்தில் நாங்கள் ஏன் நிற்க வேண்டும் என விலகி உள்ளனர்.
தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும், பாஜகவின் தோல்வி 100 சதவீதம் உறுதியாகி உள்ளது. பாஜக ஆட்சியில் வெறுப்பு அரசியல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி முதல்வர் கைதாகியுள்ளார்.இரண்டு மாத காலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட இரு மாநில முதல்வர்கள் கைது செய்யப்படுவது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்தியா கூட்டணியின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.