சாதிய ஆணவத்துக்குச் சம்மட்டி அடி – நாமக்கல் வேட்பாளர் மாற்றம்

18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி சார்பில் நாமக்கல் மக்களவைத் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் தொகுதி வேட்பளராக அந்தக் கட்சியின் சார்பில் சூரியமூர்த்தி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே சாதிய ஆணவத்தோடு உள்ளரங்குகளில் அவர் பேசிய காணொலிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தன.

அந்தக் காணொலிகள் காட்டுத்தீ போல சமூக வலைத்ளங்களில் பரவின.இதனால் அவரை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்புகள் எழுந்தன. திமுக கூட்டணியின் தீவிர ஆதரவளார்கள் கூட இவரால் இந்தத் தொகுதியின் வெற்றி பாதிக்கப்படும் என்றனர்.

தொடக்கத்தில் அவை எல்லாம் போலி என்று சப்பைக்கட்டு கட்டினார் சூரியமூர்த்தி.கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தரப்பிலும் அவை உண்மையானவை இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

ஆனால்,அவை உண்மையானவைதான் என்பது தெரியவந்தது.

இதனால், திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் சூரியமூர்த்தி மாற்றப்பட்டிருக்கிறார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்திக்குப் பதிலாக நாமக்கல் மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்நிகழ்வு உள்ளரங்கில்தானே பேசுகிறோம் என்று சாதி வெறியோடும் ஆணவத்தோடும் பேசுபவர்களுக்கு இது சம்மட்டி அடி என்றும் அவர்கள் எந்நாளும் சின்னவட்டத்துக்குள்தாம் சுற்றியாக வேண்டும்.வெகுமக்கள் தளத்துக்கு வர முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

சாதிக்கட்சி நடத்துபவர்கள் அதில் தீவிரமாக இயங்குபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என சமுதாய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Response