மோடியை வீட்டுக்கு அனுப்பும் காங்கிரசின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்

விரைவில் வரவிருக்கும் 18 ஆவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரசுக் கட்சி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக பெண்கள் சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய இராகுல்காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த 5 வாக்குறுதிகள்:

1.காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

2.ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 இலட்சம் வழங்கப்படும்.

3.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.

4.பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்படும்.

5.நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான சாவித்ரிபாய் பூலே தங்கும் விடுதிகள் கட்டப்படும்.

பெண்களை மையப்படுத்தி அளிக்கப்பட்டுள்ள இந்த வாக்குறுதிகள் வட இந்தியப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னதாக, காங்கிரசு ஆட்சி அமைந்ததும் இளைஞர்களை மையப்படுத்தி நிறைவேற்றப்படவுள்ள 5 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன. அதன் விவரம்:

1. நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. மத்திய அரசுத் துறைகளில் 30 இலட்சம் காலி இடங்கள் உள்ளன. மத்தியில் காங்கிரசு ஆட்சி அமைந்ததும் அவை அனைத்தும் நிரப்பப்படும்.

2. வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் வினாத்தாள் கசிவதைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும். பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

3. தனியார் மற்றும் பொதுத்துறை தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை கட்டாயம் ஓராண்டு பயிற்சியில் சேர்க்க வேண்டும்.அவர்களுக்கு ரூ.1 இலட்சம் வரை பயிற்சி ஊதியம் வழங்கப்படும். இதன்மூலம் இளைஞர்களுக்குப் பயிற்சி, ஊதியம் கிடைக்கும்.

4. அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ள உணவு விநியோகிப்பாளர்களின் வேலைவாய்ப்பை முறைப்படுத்தி, சமூகப் பாதுகாப்பைக் கொடுப்போம்.

5. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி உள்ளது. அதை மக்களவைத் தொகுதிக்கு ரூ.10 கோடி வீதம் ஒதுக்குவோம். இளைஞர் தொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

இந்த 5 வாக்குறுதிகளையும் காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதலில் இளைஞர்கள் அடுத்து பெண்கள் ஆகியோரை மையப்படுத்தி காங்கிரசு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வாக்குறுதிகளாக இருக்கும் என்று வட இந்திய அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response