தமிழ்த் தேசியம் என்பது குறுந்தேசியவாதமாகிவிடக் கூடாது – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழ்த்தேசியம் எனும் கருத்தாக்கம் வலுப்பெற்று தமிழ் இளையோர் அதன்பால் ஈர்க்கப்படும் இக்காலத்தில் தமிழ்த்தேசியம் குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை…

உலகில் வாழும் மக்கள் பல்வேறு தேசிய இனங்களாகப் பகுக்கப்பட்டுள்ளனர்.

தேசிய இனம் என்பதற்குரிய இலக்கணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. மரபினம், நாடு, மதம், மொழி ஆகியவற்றில் எதன் அடிப்படையில் தேசிய இனம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

1. மரபினம் (Race) என்பது உயிரியலை அடிப்படையாகக் கொண்டதாகும். உடல் அளவு, மண்டை ஓடுகளின் நீள, அகல, பருமன், மூளையின் கன அளவு, இரத்த உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மரபினத்தைப் பொதுவாக நான்கு பெரும் பிரிவுகளாக மானிட இயலார் பிரித்துள்ளனர். இவை மரபினங்கள் என அழைக்கப்படுகின்றன.

2. நாடு : ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வி எழுகிறது. எடுத்துக்காட்டாக சுவிட்சர்லாந்தில் செர்மானியர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர் வாழ்வதால் சுவிட்சர்லாந்தியர் என்ற புதிய தேசிய இனமாக அவர்கள் ஒன்றுபட்டுவிட வில்லை. மேற்கண்ட மூன்று இனத்தவரும் அவரவர்கள் மொழியின் அடிப்படையில் தனித்தனி தேசிய இனங்களாகத் தனித்தனிப் பகுதிகளில் சுயாதிக்க உரிமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

3. மதம் : ஒரு தேசிய இனத்திற்கு அடிப்படையாக மதம் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கான விடையையும் நாம் ஆராய்வோம்.

மேற்கே அல்ஜீரியாவிலிருந்து கிழக்கே இந்தோனேசியா வரை உள்ள பல நாடுகளில் இசுலாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கிறார்கள். அடிப்படையில் ஒரே மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அவர்களை ஒரே தேசிய இனமாகக் கருத வாய்ப்பில்லை. அவர்களும் அப்படி உருவாகவில்லை.

அரேபிய மொழி பேசும் முசுலீம்கள் அரேபியர் என்றும், துருக்கி மொழி பேசும் முசுலீம்கள் துருக்கியர் என்றும், பாரசீகம் பேசும் முசுலீம்கள் பாரசீகர் (ஈரான்) என்றும், புஷ்டு மொழி பேசும் முசுலீம்கள் புஷ்டுக்கள் என்றும், சிந்தி மொழி பேசும் முசுலீம்கள் சிந்திகள் என்றும், வங்காள மொழி பேசும் முசுலீம்கள் வங்காளியர் என்றும், இந்தோனேசிய மொழி பேசும் முசுலீம்கள் இந்தோனேசியர்கள் என்றும், மலாய் மொழி பேசும் முசுலீம்கள் மலேசியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

அந்தந்த மொழி பேசும் முசுலீம்கள் அவரவர் மொழிகளின் அடிப்படையில் அமைந்த தேசிய இனங்களாகத்தான் தங்களைக் கருதுகிறார்கள்.

4. மொழி : மரபினம், நாடு, மதம் ஆகிய மூன்றின் அடிப்படையில் தேசிய இனம் உருவாக முடியாது. மொழியின் அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாக முடியும். ஒரு தேசிய இன உருவாக்கத்திற்குக் கீழ்க்கண்ட 6 அம்சங்கள் காரணங்களாக உள்ளன.

1. நில எல்லை 2. அரசு, 3. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை, 4. இலக்கிய உடைமை, 5. பொதுப் பழக்க வழக்கங்கள், 6. சமூக மரபு நிலை.

இந்த வரையறுப்பின் அடிப்படையில் தமிழர்கள் தனித்தேசிய இனத்தவரா? என்ற வினாவிற்கான விடையை ஆராய்வோம்.

1. நில எல்லை : இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழர்கள் வாழும் நாட்டிற்குத் திட்டவட்டமான எல்லைகள் தொல்காப்பியர் கால முதலே வரையறுக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தின் சிறப்பாயிரத்தில் “வட வேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காலம் முதல் பாரதி காலம்வரை தோன்றிய தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் தமிழ் நாட்டின் எல்லைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வேங்கடம் முதல் குமரிவரை தமிழர்கள் வாழும் நிலப்பரப்பு சிற்சில மாறுதல்களுடன் அன்று முதல் இன்றுவரை அப்படியே நிலவி வருகிறது.

2. அரசு : சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய அரசுகளும் பிற மன்னர்களின் அரசுகளும் ஆட்சி செலுத்தி வந்துள்ளன. தமிழர்கள் தங்களுக்கென தனியான அரசுகளை அன்று தொட்டு அமைத்து வாழ்ந்தனர் என்பது புலனாகிறது. தமிழ்நாட்டை வெவ்வேறு அரசுகள் ஆண்ட போதிலும் சோழ நாட்டுத் தேசியம், பண்பாடு; சேரநாட்டுத் தேசியம், பண்பாடு; பாண்டிய நாட்டுத் தேசியம், பண்பாடு; எனத் தனித் தனி தேசிய உணர்வுகளும் தனித்தனிப் பண்பாடுகளும் உருவாகி விடவில்லை. பல்வேறு அரசர்கள் ஆண்ட பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரையும் தமிழ் மொழியும், பண்பாடும், பழக்க வழக்கங்களும் இணைத்து வைத்தன. மக்கள் அனைவரும் தமிழர்களாகவே வாழ்ந்தார்கள். அரசுகளும் தமிழர் அரசுகளாகவே இருந்தன.

3. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை : தமிழ்நாடு பல மன்னர்களால் ஆளப்பட்டாலும்கூட அவர்களின் கீழிருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை என்பது எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒருபடித்தானதாக அமைந்திருந்தது. தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படும் தமிழர்களின் அக, புற வாழ்க்கை முறைகளும் கடைப்பிடித்த பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியாகத்தான் அமைந்திருந்தன.

4. இலக்கிய உடைமை : மொழி ஒரு தேசிய இனத்தை உருவாக்கியதைப்போல அந்த மொழியின் இலக்கியங்களும் அந்தத் தேசிய இனத்திற்குரிய பண்பாடுகளை உருவாக்குகின்றன. பிற இனப் பண்பாடுகளின் ஊடுருவலின் விளைவாக சங்கப் புலவர்களின் பாடல்கள் அழிந்துபடும் நிலை தோன்றிய போது அவற்றைத் தொகுத்துப் பேணிய மூவேந்தர்களின் செயல்களில் தேசியத் தன்மை உண்டு. இதைப் பற்றித் தமிழறிஞர் திரு. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் “உண்மையில் சங்க இலக்கியங்கள் தேசியக் கவிதைகளே” தேசியக் கவிதைகள் என்பது நாட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்றவை என்ற பொருளில் அல்ல; ஒரு வலுவான தேசிய இனத்தின் குரல் அக்கவிதைகளின் கருவில் அமைந்து கிடக்கிறது” என்ற பொருளில்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

5. பொதுப் பழக்க வழக்கங்கள் : தென்புலத்தாரைத் தெய்வமாக கருதி வழிபடும் வழக்கம், நடுகல் நாட்டி வணங்கும் வழக்கம் போன்ற தமிழர்களின் பொதுப் பழக்கங்கள் ஒரு தேசியத் தன்மையின் அடிப்படையில் அமைந்தவையாகும். இது போன்ற பழக்க வழக்கங்கள் தமிழர்களை ஒன்று படுத்தியுள்ளன.

6. சமூக மரபு : தமிழர்கள் மரபுவழியில் நிலையான தன்மை கொண்டிருந்தனர். உடல் அமைப்பு, பண்பாட்டுக் கூறுகள், ஒழுக்க நியதிகள் ஆகியவற்றில் அவர்களிடம் ஒன்றுபட்ட தன்மை இருந்தது. எனவே தமிழர்கள் தனித்தேசிய இனத்தவரே என்பது இதன்மூலம் உறுதியாகப் பெறப்படும்.

ஒரு தேசிய இனத்திற்கு மொழியே அடிப்படையாக அமைகிறது. உலகில் பெரும்பாலான மக்கள் மொழியின் அடிப்படையிலேயே தங்கள் தேசிய இனத்தை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். ஒரு தேசிய இனத்தைச் சுட்டிக் காட்டும் சிறந்த அடையாளமாக மொழியே விளங்குகிறது.

தமிழர்களும் மொழியின் மூலமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். தமிழர்களைப் போலவே தொன்மையான இனத்தவரான கிரேக்கரும் மொழியின் அடிப்படையிலேயே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். சீனர், பாரசீகர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், அராபியர் போன்ற பலரும் அவ்வாறே அழைக்கப்பட்டனர்.

“தமிழ் எனும் சொல் மக்கள் கூட்டத்தையும் நாட்டையும் குறிக்க வந்திருக்கலாம்” என கே. சிவராசப்பிள்ளை கருதுகிறார்’

தமிழ் இனத்தைப் பொறுத்தவரை அகச் சான்றுகளை வைத்து நோக்கின் மொழியைக் கொண்டே தமிழினம் பெயர் பெற்றுள்ளமை தெளிவாகும். மொழியைச் சார்ந்தே இனம், நாடு, பண்பு ஆகியவற்றைக் கண்டனர். தமிழர் – தமிழ் – தமிழகம் – தமிழ்நாடு, தமிழ் உலகம் என்பன மொழி, இனம், பண்பு ஆகியவற்றின் கருத்தைக் குறிக்க எழுந்த பிற வடிவங்களேயாகும்.

“பழந்தமிழ் நூற்களில் பயின்றுவரும் திணை, குடி, குலம், கணம், இனம் ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பொருள்களை உடையனவாக விளங்குகின்றன. விழுத்திணை, தொல்குடி, நல்லினம் போன்ற சொற்கள் தொடக்கத்தில் கால்வழி என்ற பொருளைத் தந்தன. காலப் போக்கில் இனம் என்ற சொல் மட்டும் மிகுந்த பொருளைத் தரும் சொல்லாக மாறிவிட்டது.

தமிழில் வழங்கும் தேசிய இனம் என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள Nation என்ற சொல்லுக்குரிய நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பாகும். நாட்டினம் என்ற சொல்லோ, தேசிய இனம் என்ற சொல்லோ 19ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியங்களில் கையாளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேசிய இனம் பற்றிய சிந்தனை ஏதாவது ஒரு வடிவில் தொன்மைக் காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. எனினும், அதை விளக்குவதற்குரிய கலைச் சொல் உருவாகவில்லை.”

“நாட்டவர், நாட்டகம் எனப் பழந்தமிழில் வழங்கிய சொற்களை இன்று வழங்கும் நாட்டினம் என்ற சொல்லுக்கு இணையானவையாகக் கருதலாம்”

நாடு என்ற சொல்லே நாட்டினத்தைக் குறிக்க வருவதாகத் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் கருதுகிறார்.

Nation என்ற சொல்லுக்கு ஆங்கிலப் பேரகராதி பின்வரும் பொருள் தருகிறது. “பொது மரபினாலோ, பொது மொழியாலோ, பொது வரலாற்றாலோ பரந்து விரிந்துபட்ட மக்கள் ஒரு குழுவாக இணைந்து தங்களுக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் அரசை நிறுவி வாழ்பவர்.”

“அந்த மண்ணிலேயே பிறந்து அந்த மண்ணிலேயே வாழ்ந்து மடியும் கூட்டம்” என்ற பொருள்களோடு வேறு பல பொருள்களையும் தருகிறது. இந்த இரு பொருள்களே Nation என்ற சொல்லுக்கு நெருங்கிய தொடர்புடையன. “நாடு’ என்ற சொல் நாட்டினத்தைக் குறிக்கும் என்று முனைவர் தெ.பொ.மீ. முன்னே கூறிய கருத்து இங்கே வலுப்பெறுகிறது.

“பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவர்க்கு

இறையொருங்கு நேர்வது நாடு’ (குறள் 733)

என்ற குறள் விளக்கும் கருத்தில் நாட்டினம் என்ற பொருளே தொக்கி நிற்கிறது.

மேலும், நாடு என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் ஒரு நாட்டினத் தன்மையை (தேசிய இனப்பான்மை) அல்லது ஒரு நாட்டினம் பெற்றிருக்க வேண்டிய சிறப்புக் கூறுகளை விளக்கிக் காட்டும் போக்கிலேயே அமைந்துள்ளன.

“வரையறுக்கப்பட்ட எல்லை’ (குறள் 737)

“(அதில்) ஒரே அரசு’ (குறள் 735)

“வேந்தமைவுடைய தன்மை’ (குறள் 740)

“தன்னிறைவுடைய நிலைமை (நாடாவளம்)’ (குறள் 739)

“மக்களின் அரசப்பற்று’

“மக்களின் ஒருமைப்பாட்டுணர்வு’ (குறள் 733)

“இன்ப வாழ்வு காணும் மக்கள்’ (குறள் 738)

ஆகியன ஒரு நாட்டுக்கு இன்றியமையாதன என்று வள்ளுவர் கூறுகிறார். ஒரு நாட்டினத்தை வரையறுப்பதற்கும் மேற்கண்ட கூறுகள் இன்றியமையாதன என்று இன்றைய சமூகவியலாளர் கருதுகின்றனர்.

மொழியே உயிர்க்கூறு

தமிழ் உணர்வு வெறும் மொழியுணர்வு மட்டுமல்ல; இன உணர்வையும் நாட்டுணர்வையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது என்பதை முனைவர் ப. கிருஷ்ணன் பின்வருமாறு விளக்குகிறார். “மொழி, இனம், நாடு ஆகிய மூன்றுணர்வுகளும் தனித்தனியானவை போல் தோன்றினும், நாட்டு (தேசிய) உணர்வு என்ற கோணத்தில் நோக்கும்போது இவை ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் வருபவையே அகும். தமிழ்நாட்டுணர்வைப் (தேசியத்தை) பொறுத்த வரையில் இவ்வுணர்வைத் தோற்றுவிப்பதற்கு மொழியே உயிர்க் கூறாக (Vital Criteria) இருந்திருக்கிறது. மொழியின் மூலமே இனமும் நாடும் பெயர் பெறுவதாலும் மொழி மக்களின் வாழ்வோடும் இடங்களோடும் ஒன்றி வருவதாலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத அளவிற்கு இம்மூன்றுணர்வுகளும் பிணைந்திருக்கின்றன. எனவே தமிழ் நூல்களில் காணப்பெறும் தமிழுணர்வை வெறும் மொழி நோக்கில் மட்டும் காணாமல் தமிழர் வாழ்வின் உள்ளியக்கமாகவும் காண்பதே மிகவும் பொருத்தமுடையது.

தமிழ் நாட்டுணர்வு மொழி வழியே உருப்பெற்றதெனினும் ஒவ்வொரு காலத்திலும் முதன்மை பெற்றிருந்த உணர்வுகள் கலந்தே வந்திருக்கின்றன. குறிப்பாக அரசு, மொழி, மதம், பண்பாடு, சமூகம் ஆகியன தமிழ்நாட்டுணர்வில் கலந்திருக்கின்றன.

நில எல்லைகளை வற்புறுத்தியும் அரசியலுணர்வுக்கு (கோனுணர்வுக்கு) முதன்மை தந்தும் இரட்டைக் காப்பியங்களின் காலம் வரையில் வளர்ந்து வந்த தமிழ்நாட்டுணர்வு (Territorial and Political Nationalism) சமய காலத்தில் மாற்றம் பெறுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் இடப்பற்றும் (Soil Attachment) கோனாட்சி உணர்வும் சமயங்களின் செல்வாக்கால் சமயகால இலக்கியங்களில் வெகுவாக மறைந்துவிட்டன. சமய இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற ஒருமை நோக்கில் பாடப்பட்ட பாடல்கள் பல இருப்பினும் அவை அரசியல் நோக்கில் பாடப்பட்டவை அல்ல; சமய/பண்பாட்டு நோக்கில் பாடப்பட்டவையாகும். அதே நிலை சமயக் காலத்தையடுத்த சிற்றிலக்கியக் காலத்திலும், அதனையடுத்த காலங்களிலும் தொடர்கிறது. “தமிழ் மக்களின் வாழ்க்கையில் பழமையுணர்வு மரபு வழிப்பட்ட தன்மை பேரிடம் பெற்றதைப் போலவே’ இலக்கியங்களிலும் பழமையுணர்வு காலந்தோறும் வலுப்பெற்று வந்தது. இலக்கியங்களில் பழமையை நினைவு கூர்வதில் இலக்கிய இலக்கண மரபுகள், பழந்தமிழ் இலக்கியங்கள், புலவர்கள், சமய கால நிகழ்வுகள், பெருமைகள் ஆகியன இடம்பெற்ற அளவிற்குப் பழந்தமிழ் அரசியலோ, இனப் பழமையோ, நாட்டு எல்லைகளோ இடம் பெறவில்லை. எனவே தமிழ்நாட்டு (தேசிய) உணர்வு பண்பாட்டு வழிப்பட்டதாக மலர்ந்தது. இவ்வரலாற்றைத் தொகுத்துக் காணும்போது தொல்காப்பியர் காலத்திலிருந்து பேராசிரியர் சுந்தரம் பிள்ளை காலம் வரையில் வளர்ந்து வந்திருக்கும் தமிழ் நாட்டுணர்வைப் “பண்பாட்டு வழிப்பட்ட நாட்டுணர்வு என்று கூறலாம்.”

பண்பாட்டுத் தேசியம்

“பண்டைய தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களுடன், வேளிர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரும் தத்தமக்கேயுரிய நிலப்பகுதிகளில் தனியாட்சி செலுத்தி வந்தனர். அக்குறுநில மன்னர்களின் எண்ணிக்கை 12 என வரலாற்றாசிரியர் ஸ்மித் கூறுகிறார். சங்க இலக்கியங்களில் 300க்கு மேற்பட்ட அரசர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.”

தொல்காப்பியப் பாயிரத்தில் “வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து” எனத் தமிழகத்தின் எல்லை தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அகண்ட இந்த நிலப்பரப்பு சங்க காலத்திலிருந்து வெள்ளையர் வரும் காலம்வரை ஒரு ஆட்சியின் கீழ் ஒருபோதும் இருந்ததில்லை. களப்பிரர், பல்லவர், பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர் போன்ற தமிழ் மன்னர் குலங்களின் ஆட்சியிலும் அதற்குப்பின் அன்னியர்களான முசுலீம்கள், நாயக்க மன்னர்கள், மராட்டியர்கள் போன்றவர்களின் ஆட்சிக் காலங்களிலும் ஒரு பேரரசு உருவாகவில்லை.

பிற்காலச் சோழரின் ஆட்சியில் சோழப் பேரரசை உருவாக்கும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது. சோழப் பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே இலங்கை வரை விரிந்து பரந்திருந்தது. முதலாம் இராசராசன், இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலம்வரை நீடித்த இந்தப் பேரரசைப் பிற்காலப் பாண்டியர்கள் தகர்த்துவிட்டனர். அவர்கள் உருவாக்க முயன்ற பாண்டியப் பேரரசும் கி.பி. 1311ஆம் ஆண்டு மாலிக்காபூர் படையெடுப்பினால் தகர்ந்தது. சோழர்-பாண்டியர் ஆகியோர் இடைவிடாது தமக்குள் போராடிக் கொண்டதன் விளைவாக இரு அரசுகளுமே பலவீன மடைந்தன. இதன் விளைவாக அன்னியர் படையெடுத்துத் தமிழகத்தைக் கைப்பற்றும் நிலை எற்பட்டது.

பல்வேறு மன்னர் குலங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டுவந்த போதிலும் அனைத்துப் பகுதித் தமிழரையும் அணைக்கும் அம்சமாகத் தமிழ்மொழி திகழ்ந்தது. தமிழர்களை அடையாளப்படுத்தி ஒன்றுபடுத்தும் கருவியாக மொழி விளங்கிற்று.

பாணர்களும், புலவர்களும் எல்லைகளைத் தாண்டி பல நாடுகளுக்குச் சென்று அந்தந்த மன்னர்களிடம் தங்கள் புலமைத் திறனைக் காட்டிப் பரிசில் பெற்றனர். அரச குலங்கள் ஒன்றுடன் ஒன்று திருமண உறவு பூண்டன. வெவ்வேறு அந்தந்த நாட்டு மக்களும் தமக்குள் திருமண உறவு கொண்டனர். வணிகர்கள் எந்தவிதமான தங்குதடையுமின்றி அனைத்து நாடுகளுக்கும் சென்று வாணிகம் செய்து பொருளீட்டினர். சமண, பௌத்த, சைவ, வைணவத் துறவிகளும் அவ்வாறே அனைத்து நாட்டு மன்னர்கள், மக்களின் ஆதரவு பெற்றுத் தொண்டு புரிந்தனர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயக் குரவர்களும், பன்னிரு ஆழ்வார்களும் எல்லை கடந்து எல்லா நாடுகளுக்கும் சென்று பக்தி நெறியைப் பரப்பினார்கள்.

ஆக மொத்தத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டின் பலபகுதிகள் இருந்தாலும் மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இனவழித் தேசிய உணர்வு அந்தந்தக் காலக் கட்டத்தில் உருவாகாமல் இருந்தாலும், பண்பாட்டு அடிப்படையில் உருவான உணர்வு பரவியிருந்தது. மொழி அடிப்படையில் அமைந்த இந்தப் பண்பாட்டுத் தேசிய உணர்வுதான் மொழிக்கும் மக்களுக்கும் அரணாகத் திகழ்ந்தது.

கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரை தமிழகம் வடநாட்டுப் பேரரசு எதற்கும் உட்படாமல் தனித்தே திகழ்ந்தது. அசோகர் பேரரசு முதல் அக்பர் பேரரசுவரை அவர்களின் ஆளுகைக்குட்படாத ஒரு நாடாகத் தமிழகம் விளங்கிற்று. ஆனால் அன்னியரின் வாள்முனைக்கு அடிமைப்படாத தமிழகம் வடமொழிப் பண்பாட்டிற்கு அடிமைப்பட்டது. சமற்கிருதம் பேசிய பார்ப்பனர் தங்களின் உடல் வலிமையால் தமிழகத்தை வெல்லவில்லை. மாறாகப் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தி நமது மொழியையும், இனத்தையும், நாட்டையும் சீரழிக்க முயன்றனர். அவர்களின் இந்த முயற்சியைத் தொல்காப்பியர் காலம் முதல் தமிழர்கள் எதிர்த்துப் போராடி வந்திருக்கின்றனர்.

தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கீழ்க்கணக்கு நூல்கள் முதலியன தொகுக்கப்பட்டதற்கு அடிப்படையே தமிழ்மொழியையும், இலக்கியங்களையும் அழியாது பாதுகாக்க வேண்டும் என்கிற தமிழ்த் தேசிய உணர்வுதான் காரணமாகும். பழந்தமிழ் நூல்கள் இவ்வாறு தொகுக்கப்படாமல் போயிருந்தால் நமது இலக்கியங்கள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்பதில் ஐயமில்லை. இலக்கியங்கள் அழிந்திருப்பின் மொழி அழிந்திருக்கும். தமிழ் இனத்தின் தனித்தன்மை அழிந்திருக்கும். நல்லவேளையாக வடமொழியின் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து சில சேதாரங்களுடன் நாம் தப்பினோம்.

இத்தொகுப்பு நடவடிக்கைகளில் மன்னர்கள் காட்டிய ஆர்வமானது இதற்கு ஒரு சமூக-பொருளாதார- அரசியல் இயைபு, அன்றைய தேவையாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.” அது என்ன தேவை?

வடமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே அந்தத் தேவையாகும். இத்தொகை நூல்கள் தொகுக்கப்படாமல் போயிருந்தால் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் அழிந்து போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சங்கப் பாடல்கள் தொகுப்பு என்பதை அடிப்படையில் இலக்கிய வரலாற்றில் முக்கிய ஒரு நிகழ்வாக நாம் கருத வேண்டும்.

சைவத் திருமுறைகளும் வைணவர்களது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் அண்மையில் தொகை நூல்கள் என்று கருதப்பட்டன. நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களது பாடல்கள் திருமுறைகளாகவும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாகவும் தொகுக்கப்பட்டதற்குச் சமூகப் பொருளாதார நிர்ப்பந்தங்கள் – மதப் பண்பாட்டுத் தேவைகள் ஆகியவை அடிப்படையாக அமைந்திருந்தன. இவை தொகுக்கப்படாமல் போயிருந்தால் சீரிய செந்தமிழ் இசைக் கருவூலங்கள் அழிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. வைணவ ஆழ்வார்ப் பாசுரங்களைத் தொகுத்தவர் நாதமுனி. இவற்றைத் தொகைப்படுத்திய இருவரும் பாடல்களைச் சேகரித்த அதே வேளையில் அவை படைக்கப்பட்ட இசைமுறைகளையும் அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தினர். இப்பாடல்களில் இசைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தொகைகளின் பயன்பாட்டை வெளிக்காட்டுவதாக அமைந்தது. திருமுறைகளும் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் தொகுக்கப்படாமல் போயிருந்தால் பழந்தமிழ் பண்களையும் இசையையும் நாம் இழந்திருப்போம் என்பதில் ஐயமில்லை.

நமது புலவர்கள் தமிழின் தனித்தன்மையைக் காக்க இடைவிடாது போராடி வந்துள்ளனர். தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்கப்புலவர்கள், இளங்கோ அடிகள், சேக்கிழார், திருத்தக்கதேவர், கம்பர், தேவாரம் பாடிய மூவர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள் போன்றவர்கள் வடமொழிக் கலப்பு இல்லாத தமிழில் எழுதினார்கள். வடசொற்களை தமிழ்ப்படுத்தியும், தமிழ்ப்பண்பாட்டிற்கு ஏற்பவும் நூல்கள் படைக்கப்பட்டன. இந்தப் போக்கு 20ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. இன்னமும் தொடர்கிறது.

வடமொழிக் கலாச்சாரத்தின் விளைவாக மணிப்பிரவாள நடை, சாதியப் பிரிவுகள், தீண்டாமை போன்ற வேண்டாதவை தமிழ்நாட்டில் புகுந்து மொழி, சமுதாயச் சீரழிவுகளை ஏற்படுத்தின. தமிழர்கள் வணங்கி வந்த தெய்வங்கள் ஆரிய தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. கோயில்களில் சமற்கிருத வழிபாட்டு முறைகள் திணிக்கப்பட்டன. மன்னர்கள், கடவுள்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றின் பெயர்கள் வடமொழியில் மாற்றப்பட்டன. தமிழிசையும், பண்களும் வடமொழிப் பெயர் பெற்றன. தமிழர்களுக்கேயுரிய ஆடற்கலை பரதநாட்டியமாயிற்று. தொன்மையான தமிழிசை கர்நாடக சங்கீதமாயிற்று. தமிழ்ப் பண்கள் இராகங்களாக உருமாற்றம் பெற்றன. சுருக்கமாகக் கூறினால் தமிழ்நாட்டில் வடமொழிப் பண்பாட்டின் தாக்கம் சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த இடைவிடாது முயன்றது. ஆனால் அதற்குத் தொடர்ந்து எதிர்ப்பையும் தமிழர் தெரிவித்தே வந்தனர்.

“தமிழ்த் தேசியத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த அறிஞர் பெருமக்கள் ஆற்றிய அரிய தமிழ்ப் பணிகளும் செறிந்த பங்களிப்பும் வியப்பை அளிக்கின்றன; விம்மிதம் மீதுர்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு – தமிழ் மொழியின் வரலாற்றில் தனித்தன்மை கொண்டது. வித்தக விளைச்சலுக்கு வீரிய உரமளித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தோன்றி, தமிழின் வளர்ச்சிக்கும் தமிழின விழிப்புக்கும் ஊட்டம் தந்தனர். அவர் தம் சிந்தனைகள் மற்றும் சீரிய பணிகளின் விளைவுகள், இருபதாம் நூற்றாண்டிலும் நீண்டு படர்ந்தன.”

19ஆம் நூற்றாண்டில் இராமலிங்க வள்ளலார், நீதிபதி வேதநாயகர், பேராசிரியர் சுந்தரனார், கோபால கிருஷ்ண பாரதியார் போன்றவர்கள் தோன்றித் தமிழ் மறுமலர்ச்சிக்கும், சமய மறுமலர்ச்சிக்கும் வித்திட்டனர்.

18, 19ஆம் நூற்றாண்டுகளில் பெஸ்கி (எ) வீரமாமுனிவர், டாக்டர் கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற மேனாட்டு அறிஞர்கள் தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகம் உணரச் செய்தனர்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர் ஆகியோர் வட மொழியின் மரணப் பிடியிலிருந்து தமிழை மீட்டனர். அவர்களைத் தொடர்ந்து தேவநேயப் பாவாணர் முதல் சாலையார், சாலினியார், இலக்குவனார், பெருஞ்சித்திரனார் வரை எண்ணற்ற தமிழறிஞர்கள் தனித்தமிழை வளர்த்தனர்.

சி.வை.தாமோதரனார், உ.வே. சாமிநாத அய்யர் போன்றோர் ஏட்டுச் சுவடிகளிலிருந்த பழம் தமிழ் நூற்களை அச்சு வடிவத்தில் கொண்டுவந்து உயிர்ப்பித்தனர்.

பாண்டித்துரைத் தேவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தையும், உமா மகேசுவரனார் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையும் தோற்றுவித்துத் தமிழ்க் கல்வியிலும் தமிழ் ஆராய்ச்சியிலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தினர்.

பாரதி முதல் பாரதிதாசன் வரை எண்ணற்ற கவிஞர்கள் தமிழின் சிறப்புக் குறித்தும், தமிழரின் மேன்மை குறித்தும் கவிதைகள் பாடி தமிழ்த் தேசியத்தை வளர்த்தார்கள்.

மேற்கண்ட அறிஞர் பெருமக்கள் ஒரு நுற்றாண்டு காலத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்ட அரிய முயற்சிகளின் விளைவாகத் தமிழ்த் தேசிய உணர்வுக்கு வலுவான அடித்தளம் இடப்பட்டது.

“தமிழ்த் தேசியம் உருவாவதற்குரிய தமிழ்ப் பண்பாட்டின் சிந்தனைக் கருவூலங்களைத் தமிழ்ப் பெருமக்களுக்கு வழங்கி, தமிழின வரலாற்றுப் போக்கில் திருப்புமுனையைப் படைத்த இப்பெருமக்களையும், அத்துறையில் தம்மை ஈகம் செய்து கொண்ட மற்ற அறிஞர்களையும் தமிழ் உலகம் என்றென்றும் ஏற்றிப் போற்றக் கடமைப்பட்டது.

பழஞ்சுவடிகள் சிலவற்றை, தாமோதரனாருக்கும் முன்னரே, அச்சாக்கி வெளியிடும் அரிய பணியில் ஈடுபட்ட சில தமிழ்ப் பெருமக்களில் தமிழீழம் ஆறுமுக நாவலர், முகவை இராமானுசக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், புதுவை நயனப்ப முதலியார், திருவேங்கடாசல முதலியார், சரவணப் பெருமாளய்யர், திருமயிலை சண்முகம் பிள்ளை, தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை, நச்சினார்க் கினியார் உரையுடன் பதிப்பித்த மழவை மகாலிங்கய்யர், சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்த சோடாசாவதானம் சுப்புராயுலு செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

1937ஆம் ஆண்டில் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. தமிழறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், கா. சுப்பிரமணியபிள்ளை, தா.வே. உமாமகேசுவரனார் போன்றவர்களும் பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் தங்கோ, சி.டி. நாயகம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி போன்ற தமிழர் தலைவர்களும் ஒன்றுகூடி இந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காக்கப் போராடினார்கள். இந்தப் போராட்டத்தில்தான் “தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் பிறந்தது. இந்த முழக்கம் தமிழ்த் தேசிய உணர்வுக்கு உரமிட்டது.

1965ஆம் ஆண்டு தமிழக மாணவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கொதித்தெழுந்து தமிழக வரலாறு காணாத பெரும் போராட்டத்தை நடத்தினர். பல இளைஞர்கள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஏராளமானவர்கள் பலியானார்கள். ஆனால், தமிழ் அரியணையில் அமர முடியவில்லை. மாறாக, ஆங்கிலம் கல்வி மொழியாக இன்றைக்குத் தமிழகத்தில் ஆட்சி செய்கிறது. இதற்காகவா இத்தனை பேர் உயிர்த் தியாகம் செய்தார்கள்? போராடினார்கள்?

தமிழீழப் படுகொலை

1983ஆம் ஆண்டு சூலை மாதம் இலங்கையில் 3000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி தமிழ்நாட்டைக் குலுக்கியது. தமிழகம் ஆவேசம் அடைந்தது. சிற்றூர்களிலிருந்து பெரு நகரங்கள் வரை மக்கள் கொதித்தெழுந்து போராடினார்கள். இயற்கையாகப் பீறிட்டு எழுந்த இந்த உணர்வு தமிழ்த் தேசியமாக உருவெடுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு வெற்றியை நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதைக் கண்டு இந்திய அரசு அதிகக் கலக்கமடைந்தது. இந்திய – இலங்கை உடன்பாடு என்ற பெயரால் இந்தியப் படை அனுப்பப்பட்டு ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் தமிழத் தேசிய உணர்வாளர்களுக்கு எதிராகக் கடுமையான அடக்குமுறைச் சட்டங்கள் ஏவப்பட்டன. ஆனாலும், தமிழ்த் தேசிய எழுச்சி மேலும் வளர்ந்ததே தவிர, குன்றவில்லை.

2009ஆம் ஆண்டில் இந்தியா உள்பட 20 நாடுகள் ஒன்றுகூடி சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தும், நிதியை வாரிக் கொடுத்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் துணை நின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். வரலாறு கண்டறியாத இந்த கொடுமையை ஏன்? என்று தட்டிக்கேட்க உலக நாடுகள் எதுவும் முன்வரவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி தமிழ் மக்களும் அன்று ஒன்றுபட்டு நின்று போராடியிருந்தால், இந்திய அரசு பணிந்திருக்கும். பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் உயிர்களை நாம் காப்பாற்றியிருந்திருக்க முடியும். ஆனால், நமது ஒற்றுமைக் குறைவினால் ஈழத் தமிழர்கள் பெரும் இழப்பிற்கு ஆளானார்கள்.

தமிழிழத்தில் நமது இளைஞர்களும் இளம் பெண்களும் வாழ வேண்டிய வயதில் தாயகம் மீட்புப் போரில் சாவை இன்முகத்துடன் அணைத்துக்கொண்டிருக்கிறார்கள். புதிய புறநானூறு அங்கே எழுதப்பட்டு வருகிறது. புலிகளின் போராட்டம் தமிழீழ மண்ணை மீட்கும் போராட்டம் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் விடிவுக்கான முதல் கட்டப் போராட்டமாகும். இந்த காலகட்டத்தில் தமிழ்த் தேசிய எழுச்சியை கட்டிக் காக்கவும், வளர்க்கவும் நாம் தவறுவோமானால், வருங்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது. காலம் அற்புதமாகக் கனிந்துள்ளது. இப்போது உருவாகியிருப்பதைப் போன்ற சிறந்த வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை. கிடைத்தற்கரிய வாய்ப்பை நழுவ விடுவோமானால் நம்மைப் போன்ற ஏமாளிகள் வேறு யாரும் இல்லை.

கடந்த 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எண்ணற்றத் தமிழறிஞர்களும், கவிஞர்களும், தலைவர்களும் கண்ட கனவை நனவாக்குவது நமது கடமையாகும். அவர்கள் நமக்கு ஊட்டியிருக்கிற தமிழ்த் தேசிய உணர்வு என்னும் பதாகையை உயர்த்திப் பிடித்து நமது இலக்கை நோக்கி நாம் முன்னேறியாகவேண்டும்.

அரசியல், சமூகவியல், பொருளியல் ஆகிய துறைகளில் தமிழ்த் தேசியத்தை நிலைபெறச் செய்வதும், இந்த அடிப்படையி்ல் புதிய தமிழகத்தைக் கட்டமைப்பதும் நமது ஒரே குறிக்கோளாக இருக்கவேண்டும். சுருங்கக் கூறின் நமது வாழ்வியல் நெறியாகத் தமிழ்த் தேசியமே விளங்கவேண்டும்.

குறுந்தேசியவாதம்

அதேவேளையில் தமிழ்த் தேசியம் என்பது குறுந்தேசியவாதமாகிவிடக் கூடாது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உன்னதமான நோக்கத்தினை உலகிற்கு அளித்தவர்கள் தமிழர்கள். எனவே, அதை மறந்துவிடாமல் தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மை தேசிய இனமக்களை நம்முடன் அரவணைத்துக் கொண்டு நாம் செல்லவேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறி இந்த நாட்டையே தங்கள் நாடாகக் கொண்டு வாழ்ந்த வருபவர்களை வெளியேற்ற வேண்டும் எனக் கூறுபவர்கள் உண்மையான தமிழ்த் தேசியவாதிகளாக இருக்க முடியாது.

ஒரேயொரு மொழியைப் பேசும் தேசிய இன மக்களைக் கொண்ட நாடு உலகத்தில் எங்கும் கிடையாது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டில் சிறுபான்மை தேசிய இனத்தவர் வாழ்வது தவிர்க்க முடியாததாகும்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் இலட்சக்கணக்கான தமிழர்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை, பர்மா, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம், மொரீசியசு, தென்னாப்பிரிக்கா, போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலும் மற்றும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறு எண்ணிக்கையிலும் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேற்கண்ட நாடுகள் பலவற்றில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாகவும், தலைமையமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அதிகாரிகளாகவும், படைத்தளபதிகளாகவும் பொறுப்புகள் வகித்து, அந்தந்த நாட்டிற்குப் பெருமைத் தேடித் தந்திருக்கிறார்கள். தமிழினம் இன்று உலகம் தழுவிய இனமாகும். எனவே குறுந்தேசியவாதம் பேசி வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களைச் சிறுமைப்படுத்திவிடக் கூடாது.

தமிழ்த் தேசிய உணர்வை நமது தலைமுறையிலேயே நிலைநிறுத்தி ஆகவேண்டும். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நாம் நமது தொண்டினாலும், தியாகத்தினாலும் இதை நிறைவேற்றுவோமானால், வரப்போகிற நமது தலைமுறையினர் உரிமை கொண்ட மக்களாக வாழ்ந்து தமிழர்களின் பொற்காலத்தைப் படைப்பார்கள் என்பது திண்ணம்.

நன்றி – தென்செய்தி

Leave a Response