ஈரோடு பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு?

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வேலைகளில் அனைத்து அரசியல்கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

தமிழ்நாட்டிலும் திமுக, அதிமுக ஆகிய இரண்டுகட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு என எல்லாக் கட்சிகளும் வெளிப்படையாகச் சொல்கின்றன.

ஆனால், எல்லாக் கட்சிகளிலும் ஏற்கெனவே பேச்சுவார்த்தைகள் நடந்து தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்துவிட்டன என்றும் சொல்கிறார்கள். அந்த முடிவில் கடைசிநேரத்தில் சிற்சில மாற்றங்கள் நடக்கலாம்.ஆனால் பெரும்பாலும் பேசியபடியே நடக்கும் என்கிறார்கள்.

அந்தவகையில் ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக சார்பில் போட்டியிடவிருப்பவர் ஆற்றல் அசோக்குமார் என்று சொல்லப்படுகிறது.

இவர் அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.செளந்தரத்தின் மகன் மட்டுமல்ல தற்போது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சி.கே.சரஸ்வதியின் மருமகன் என்பதும், ஈரோட்டில் புகழ்பெற்ற இந்தியன் பப்ளிக் ஸ்கூல் எனும் தனியார் பள்ளி உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு எடப்பாடி அணியினர் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் அதன் காரணமாக தொகுதி முழுக்க பல்வேறு நற்பணிகளை அவர் செய்துவருகிறார் என்று சொல்கிறார்கள்.ஆற்றல் அறக்கட்டளை என்கிற அமைப்பின் மூலம் அவர் இந்தப் பணிகளைச் செய்துவருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் சேரும்போதே ஈரோட்டில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது, அதிமுகவில் இவருக்கு எதிரான குரல்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. எதிர்க்குரல்கள் வலுக்குமா? வலுவிழக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

Leave a Response