காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி கடந்த 14 ஆம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தைத் தொடங்கினார். கடந்த வியாழனன்று பயணம் அசாம் மாநிலத்தில் நுழைந்தது. அங்கு சென்றது முதல் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை விமர்சித்து வருகிறார் இராகுல்.
இந்தியாவிலேயே அதிகளவு ஊழலில் அதிகளவு திளைத்த முதலமைச்சர் பாஜக முதலமைச்சர் ஹிமந்தா தான் என அவர் பேசி வருகிறார். நேற்றுமுன்தினம் வடக்கு லக்கிம்பூரில் இராகுலின் பயணத்தை வரவேற்கும் சுவரொட்டிகள், பதாகைகளை மர்மநபர்கள் கிழித்து சேதப்படுத்தினர். மேலும் அதில் பங்கேற்றவர்கள் வந்த வாகனங்களை அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இராகுல் காந்தியின் நீதி யாத்திரை நேற்று நாகோன் சென்றது.அப்போது அவர் சென்ற பேருந்தைச் சுற்றி வளைத்த பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என கோசமிட்டனர்.கைகளில் கம்புகளை வைத்திருந்த தொண்டர்கள் ஒற்றுமைப் பயணத்துக்கு எதிராகவும் கூச்சலிட்டனர். அவர்களைத் தடுக்க முயன்ற அசாம் மாநில காங்கிரசு தலைவர் பூபன் போராவை பாஜகவினர் தாக்கினர். இதில், அவரது மூக்கு, வாயில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த இராகுல் காந்தி உடனே பேருந்தில் இருந்து வெளியே இறங்கி அவர்களுடன் பேச வந்தார். பின்னர் பேருந்தில் ஏறிய அவர் அங்கு நின்ற பாஜகவினரைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார். இதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதுகுறித்து இராகுல், அன்பிற்கான கடை எப்போதும் எவருக்கும் திறந்து இருக்கும். ஒன்று பட்ட பாரதம்,வெல்லும் இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.
பிஸ்வநாத் சரியாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இராகுல் காந்தி நேற்று பேசுகையில்….
இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளக்கூடாது என அசாம் அரசு மிரட்டி வருகிறது. ஒற்றுமைப் பயணத்தின் போது குறிப்பிட்ட வழிகளில் செல்வதற்கு அரசு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், மக்களை மிரட்டி அவர்களை அடக்கி விடலாம் என நினைக்கின்றனர். இது இராகுல் காந்தியின் பயணம் அல்ல, மக்களின் குரலாய் ஒலிக்கும் பயணம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அசாம் முதலமைச்சரும் அவரது குடும்பத்தினரும் அதிகளவு ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு குடும்பத்துக்காகவே மாநில அரசு செயல்படுகிறது என்றார்.
அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ துறவியான மந்தா சங்கர்தேவா பிறந்த ஊரான பட்டதிரவா என்ற இடத்துக்கு இன்று இராகுல் காந்தி செல்வார் என காங்கிரசு அறிவித்துள்ளது.
அயோத்தியில் இன்று இராமர் கோயில் திறக்கப்படும் தினத்தில் சங்கர் தேவா பிறந்த ஊருக்கு இராகுல் காந்தி சென்றால், அசாம் மாநிலத்துக்குத் தவறான பெயர் ஏற்படும். எனவே இராகுல் இன்று அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். 22 ஆம் தேதிக்கு பின்னர் அவர் அந்த இடத்துக்குச் செல்லலாம் என முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா கூறியுள்ளார்.
அதேபோல், அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள பட்டதிரவா கோயிலுக்குச் சென்ற இராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதற்கு, கோயிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்? என இராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அயோத்தியில் இராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பிறகுதான் அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.