அதிமுகவை மீட்போம் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி இராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும் என்று ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பழனிச்சாமி தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். பழனிச்சாமி ராஜினாமா செய்யும் வரை தொண்டர்கள் உரிமையைக் காக்கும் போராட்டம், யுத்தம் தொடரும். பதவி கொடுத்த சசிகலாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் பழனிச்சாமி.ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் ஒரே ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை. பிரதமரைச் சந்தித்தபோது வாழ்த்துக் கடிதம் மட்டுமே அளிக்கக் கூறினார்.வாய்ப்பு வந்தால் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பேன்.

எடப்பாடி தொடர்பான இரகசியங்களைப் பொது வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும்போது வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதிமுகவை மீட்கப் போராட்டம் தொடரும். சசிகலா விரும்பினால் நிச்சயம் அவரைச் சந்திப்பேன். டிடிவி தினகரனுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம். பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற கொடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Response