ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம் – அதிர்ந்த ஆளுநர் ஆர்.என்.இரவி

பாஜக, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒன்றிய அரசு அவர்களுக்கு ஆதரவான ஆளுநர்களை நியமனம் செய்து ஆளும் அரசுகளுக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.தமிழ்நாடு, கேரளா, புதுவை, தெலுங்கானா, பஞ்சாப் ஆகியவை உட்பட பல்வேறு மாநிலங்களில் இது நடக்கிறது.

இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செயல்படவியலாத நிலை ஏற்பட்டு பெரும் சிக்கல்கள் உருவாகிவருகின்றன.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில்,”தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாகக் காலதாமதம் செய்து வருகிறார். இதேபோல ஒப்புதலுக்கு அனுப்பப்படும் அரசாணைகளையும் கிடப்பில் போடுகிறார். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துச் செல்வதற்கும், சிபிஐ விசாரணை உள்ளிட்டவைக்கும் உத்தரவிட மறுக்கிறார் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் பரிசீலிப்பதற்கான காலவரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் உடனடியாக வகுக்க வேண்டும்.
மேலும், மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததோடு, தமிழக ஆளுநரின் நிலைப்பாட்டைக் கேட்டுத் தெரிவிக்குமாறு ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கடந்த 10 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கிடப்பில் போட்டுவைத்திருந்த 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடர்ந்த ரிட் மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் வாதத்தில்,”ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட முடியாது. தற்போது, எந்தக் காரணத்தையும் கூறாமல் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். ஏழு கோடி மக்களுக்குப் பதில் அளிக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. ஆளுநரின் செயலால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு வழங்க வேண்டும். மேலும் உரிய விளக்கம் அளிக்காமல் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்புவது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்குத் தான் அதிகாரம் உள்ளது என்பதை ஆளுநர் மறந்து செயல்படுகிறார் என கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி,” இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் முன்னதாக வழங்கப்பட்ட நோட்டீஸ் எங்களுக்குக் கிடைக்கவில்லை.இருப்பினும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழக்காத விவகாரம் தொடர்பாக நாங்கள் ஒரு அறிக்கை தயார் செய்து வைத்துள்ளோம். அதனை நீதமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி மற்றும் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பினார்.நவம்பர் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து ஆணை பிறப்பித்த பிறகு 13 ஆம் தேதி 10 மசோதாக்களை அரசுக்கு ஆளுநர் இரவி திருப்பி அனுப்பியுள்ளார். சில மசோதாக்கள் 2020 ஜனவரியிலேயே ஆளுநருக்கு அனுப்பப்பட்டவை.உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியபிறகு ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது. அப்படியென்றால் கடந்த 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார் என்று ஆளுநரிடம் கேட்க விரும்புகிறோம். எந்த ஒரு விளக்கத்தையும் தெரிவிக்காமல் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.இரவி திருப்பி அனுப்பியது ஏன்? மேலும் ஒரு மாநில அரசு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடும் வரையில், அவர் அங்கு என்ன செய்துகொண்டு இருந்தார்?

அரசியலமைப்பு 200 ஆவது சட்டப் பிரிவின் படி மூன்று அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளது.அதில், மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது, அதனை நிராகரிக்க வேண்டிய சூழல் இருந்தால் அதற்கான காரணத்தை அரசுக்குத் தெரிவிப்பது, அல்லது இறுதியாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது ஆகியவையாகும். இவை அனைத்தையும் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.இரவி செய்யத் தவறி உள்ளார். இந்த விவகாரத்தில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதாக்கள் தொடர்பாக மாநில ஆளுநர் ஆர்.என்.இரவி என்ன செய்யப்போகிறார் என்பதைப் பார்ப்போம்? இது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் தரப்பு ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் அன்றைய தினம் ஆளுநர் தொடர்பான வழக்குடன், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஊழல் விவகாரம், சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிப்பது, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் ஆகியவை குறித்த மசோதாக்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் இப்படி ஓங்கிக் குட்டியிருப்பதால் ஆளுநர் ஆர்.என்.இரவியும் ஒன்றிய அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response