ரெய்டெல்லாம் செருப்புக்குச் சமம் – கே.பாலகிருஷ்ணன் அதிரடி

சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்குப் பகுதி திமுக சார்பில் “கலைஞர் என்றால் பேரறிவு காலம் தந்த தமிழமுது” என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் பெரம்பூர் செம்பியம் இராகவன் தெருவில் நடைபெற்றது.

இதற்கு கொளத்தூர் கிழக்குப் பகுதிச் செயலாளர் ஐ.சி.எப் முரளிதரன் தலைமை வகித்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சி.பி.எம் தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேயமக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதிமோகன் ஆகியோர் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் சி.பி.எம் தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது…..

கலைஞர் வாழ்க்கையே போராட்டமான வாழ்க்கைதான். சிறுவயதில் இருந்து போராடினார். மரணத்திற்குப் பின்னும் போராடியவர் கலைஞர். எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்தவர்.அவர் தொடாத துறைகளே இல்லை, அவர் பல்கலைக்கழகங்களில் படித்தவர் அல்ல. ஆனால் பல பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்யும் அளவிற்கு சாதனை படைத்தவர். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை உருவாக்கியவர்.

அவருக்குப் பிறகு தமிழகத்தில் இனிமேல் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற கனவில் பாஜகவினர் இருந்திருப்பார்கள். ஆனால் கலைஞரைவிடப் பல மடங்கு வலுவாக எதிர்ப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு ஆளுநர் கூட அமைதியாக இருப்பார். ஆனால் பாஜகவுக்கு எதிராக தினமும் நம் முதலமைச்சர் போர் முரசு கொட்டுகிறார். இது அண்ணாமலைக்கும் ஆளுநருக்கும் பிடிக்கவில்லை. ரெய்டு நடத்தி எதிர்க்கட்சியினை பயமுறுத்த நினைக்கிறார்கள். இவையெல்லாம் திமுகவிற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் காலில் போட்டுள்ள செருப்பிற்குச் சமம்.

அவசர நிலையைக் கொண்டு வராமல் அதை எதிர்த்தவர் கலைஞர். 1000 ரூபாய் கொடுத்ததை விட அதற்கான பெயர் தான் சிறப்பு.

பாஜக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இனி இந்தியாவிலேயும் தலைதூக்கமுடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response