சந்திரயான் 2 தோல்வி ஏன்? சந்திரயான் 3 நிலை என்ன?

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 40 நாள் பயணத்துக்குப் பிறகு, விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது.

இந்நிலையில், திட்டமிட்டபடி லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலவுக்கு அருகே 25 கி.மீ உயரத்துக்கு லேண்டர் வந்ததும் எதிர்விசையைப் பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும். அதன்மூலம் தரைப் பகுதிக்கும், லேண்டருக்குமான உயரம் படிப்படியாகக் குறையும். தரையில் இருந்து 150 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் கொண்டுவரப்பட்டதும் சில விநாடிகள் அப்படியே அந்தரத்தில் நிறுத்தி வைக்கப்படும். அதில் உள்ள சென்சார்கள் மூலம், தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தேர்வு செய்யப்படும்.

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே மெதுவாகத் தரையிறங்கும். லேண்டர் தரையிறங்கிய 3 மணி நேரத்துக்குப் பிறகு, அதில் வைக்கப்பட்டுள்ள ரோவர் வாகனம் வெளியே வந்து ஆய்வு மேற்கொள்ளும்.

சந்திரயான்-2 பயணத்தின்போது இறுதிக்கட்டம் வரை சீராகச் சென்றது. ஆனால் அதனை மென்மையாகத் தரையிறக்க இயலவில்லை.அதை அதிக திசைவேகத்தில் (வெலாசிட்டி) இயக்கியதால் க்ராஷ் லேண்டிங் ஆனது. லேண்டர் செயலிழந்தது. இந்த முறை லேண்டரின் கால்கள் மிகவும் வலுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேடு, பள்ளம் நிறைந்த நிலவில் சமதளப் பரப்பைக் கண்டறிந்து தரையிறங்க ஏதுவாக அதன் கால்களில் டெலஸ்கோப் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கார் வேகத்தைக் கட்டுப்படுத்தும் லேசர் டாப்ளர் வெலாசிட்டி சென்சார் (எல்விடி) தொழில்நுட்பமும் லேண்டரில் உள்ளது.

மேலும் அப்போது தரையிறங்கும் இடத்தின் அளவு 500m x 500m என்றளவில் குறுகியதாக இருந்தது.இதனால் லேண்டர் இறங்கும்போது கட்டுப்பாட்டை மீறி வெளியே சுழன்றதால் தவறு நடந்தது. இந்தமுறை சுமார் ஐந்து கிலோமீட்டர் அளவுக்குத் தரையிரங்கும் இடத்தைத் தேர்வு செய்யும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு திட்டமிட்டு இந்த முறை சிறு தவறுக்குக் கூட இடம் கொடுக்காமல் திட்டமிட்டுள்ளோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே, இந்த முறை வெற்றி உறுதி
என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Response