பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. நேற்று, மக்களவை கூடியதும் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி தரப்பில் தரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர், மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பிறப்பு, இறப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது உள்ளிட்ட 6 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியதும், சர்ச்சைக்குரிய வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடரில் மொத்தம் 31 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மணிப்பூர் விவகாரத்தில் கடும் அமளி நிலவினாலும், அமளிக்கு நடுவே முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், பல்வேறு தரப்பினரும் எதிர்க்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா அமளிக்கு மத்தியில் சிறிய விவாத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திருத்த மசோதாவில், சா்வதேச எல்லைப் பகுதிகளில் இருந்து 100 கி.மீ. வரை உள்ள 10 ஹெக்டேர் அளவிலான வனப் பரப்புகள், வனப் பாதுகாப்புச் சட்டத்துக்கு உள்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பாதுகாப்பு சார்ந்த கட்டமைப்புகளை மேற்கொள்வதற்காக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.மேலும், இடதுசாரி பயங்கரவாதம் காணப்படும் பகுதிகளில் 5 ஹெக்டேர் அளவிலான வனப் பரப்புகளுக்கும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் பழங்குடியினருக்கான பள்ளிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது வனப் பகுதிகள் மீது பழங்குடியினர். கொண்டுள்ள உரிமைகளைப் பெருமளவில் பாதிக்கும் என ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வனப் பகுதிகளுக்கு நடுவே மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். பழங்குடிகளிடம் இருந்து வன நிலங்களை பறித்து கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கவே இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இம்மசோதா நிறைவேறியதால் ஒரே நாள் இரவில் நாட்டின் 15% காடுகள் அழியும் அபாயம் ஏற்படும் என்று சூழலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.