சர்ச்சைக்குரிய அமலாக்கத்துறை இயக்குநருக்கு 3 ஆவது முறை பதவி நீட்டிப்பு – மோடி அரசு கோரிக்கை

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததால் எல்லோராலும் அறியப்பட்ட துறை அமலாக்கத் துறை. இந்தத் துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, பாஜக அரசின் அடியாளாகச் செயல்படுகிறார் என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதற்குக் காரணம், அவருடைய முதல் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு 3 முறை அவருக்கு ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. 62 வயதான சஞ்சய் குமார் மிஸ்ராவின் சொந்த மாநிலம் உத்தரபிரதேசம். 1984 ஆம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியான அவர் டெல்லியில் உள்ள வருமானவரித்துறை தலைமை கமிஷனராக இருந்தார்.

அவர் 2018 நவம்பர் 19 ஆம் தேதி அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டார்.இந்தப் பதவி 2 ஆண்டுகள் வகிக்கக்கூடியது. அவரது பதவிக்காலம் முடிந்தபின் 2020 நவம்பர் 13 ஆம் தேதி மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அந்தக் காலமும் முடிந்த பின்னர் 2021 நவம்பர் 17 இல் மேலும் ஓராண்டு நீட்டிப்பு வழங்கியது. அதோடு இனிமேல் அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர் ஆகியோர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று ஒன்றிய அரசு திருத்தி அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து காங்கிரசு செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரசு பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரசு எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம்நாத், சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஏற்கனவே அமலாக்கத்துறையை ஏவி ஒன்றிய அரசு பழிவாங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு 3 ஆவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை இரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் அவர் ஜூலை 31 வரை பதவியில் நீடிக்க கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ஜூலை 31 ஆம் தேதிக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில்,
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு, பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்கக் கோரி ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒன்றிய அரசின் இந்தச் செயல் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கும் வண்ணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response