புதுச்சேரியில் எரிவாயு உருளைகளுக்கு மானியம் – அரசு அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நடந்தது. நிதிநிலை அறிக்கையில் அரசின் எந்த நிதியுதவியும் பெறாத ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.300 எரிவாயு உருளை மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் இரங்கசாமி வெளியிட்டார்.

இவற்றில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை 13 ஆயிரம் பேருக்கு வழங்கி திட்டம் தொடங்கப்பட்டது.தற்போது புதிய பயனாளிகளைக் கண்டறியும் பணி நடந்து வருகிறது. சுமார் 75 ஆயிரம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் இரங்கசாமி தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எரிவாயு உருளை மானியத்துக்கு அரசாணை வெளியாகியுள்ளது. இதில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியமாக ரூ.300, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.150 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ஒரு எரிவாயு உருளை வீதம் ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது.

நிதிநிலை அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், மஞ்சள் அட்டைகளுக்கு தொகை பாதியாக ரூ.150 என குறைக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகை கவுரவ குடும்ப அட்டைதாரர்களுக்குக் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response