ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள் – நடிகர் விஜய் வேண்டுகோள்

அகில இந்திய தளபதி விஜய்மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கி, சிறப்பிக்கும் விழா சென்னை நீலாங்கரையில் நேற்று நடைபெற்றது.

அங்குவந்த நடிகர் விஜய், மேடையின் கீழ் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து, பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் மற்றும் நிதியுதவி வழங்கினார்.

பின்னர், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது…..

ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்தது போல உணருகிறேன். நான் நடிகன் ஆகவில்லை என்றால் அதுவாக ஆகியிருப்பேன், இதுவாக ஆகியிருப்பேன், டாக்டராக ஆகியிருப்பேன் என்றெல்லாம் சொல்லிப் போரடிக்க விரும்பவில்லை. என் கனவெல்லாம் சினிமா, நடிப்புதான். அதை நோக்கித்தான் என் பயணம் போய்க்கொண்டிருக்கிறது. ஒருவேளை… சரி அதை விடுங்க… அது இப்போ எதுக்கு…

‘காடு இருந்தா எடுத்துப்பாங்க… ரூபாய் இருந்தா பிடுங்கிப்பாங்க… ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது’ என்று ஒரு படத்தில் ‘டயலாக்’ வரும். இது என்னை மிகவும் பாதித்த வரிகள். ஏனெனில் இதுதான் எதார்த்தம். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் பங்குக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நீண்ட நாளாகவே யோசித்துக்கொண்டிருந்தேன். அதுக்கான நேரம்தான் இது.

முழுமையான கல்வி என்பது படித்து டிகிரி வாங்குவது மட்டும் ஆகாது. படித்த, கற்ற விசயங்கள் எல்லாம் மறந்துபோகும்போது எஞ்சிய விசயம் எதுவோ, அதுவே கல்வி என்றார் ஐன்ஸ்டீன். முதலில் இது புரியவில்லை. ஆனால் போகப்போக புரிந்தது. அப்படி படித்த, கற்ற விசயங்களை நீக்கி பார்த்தால் நம்மிடம் எஞ்சியிருப்பது குணங்களும், சிந்திக்கும் திறனும்தான். இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்போது முழுமையான கல்வியாகவே அது மாறுகிறது.

பணத்தை இழந்தால் ஒன்றும் இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ ஒன்றை இழக்கிறீர்கள். ஆனால் குணத்தை இழந்தால் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. இத்தனை நாட்கள் பெற்றோர் கட்டுப்பாட்டில் இருந்த நீங்கள், இனி மேல்படிப்புக்காக வேறு ஊர்களுக்குச் சென்று படிப்பீர்கள். விடுதிகளில் தங்கி படிப்பீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். முதல் தடவையாக பெற்றோர் கண்காணிப்பைத் தாண்டி, வேறு ஒரு வாழ்க்கைக்குப் போகும்போது, அங்கு ஒரு சுதந்திரம் கிடைக்கும். அந்தச் சுதந்திரத்தை, சுய ஒழுக்கத்துடன் பார்த்துக் கையாளுங்கள். வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழுங்கள். அதேவேளை உங்கள் தனித்தன்மையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான் என்பதை அவ்வப்போது நினைவில் கொள்ளுங்கள்.

தற்போதைய காலம், தகவல் தொழில்நுட்பக் காலம். சமூக வலைதளங்களில் வரும் முக்கால்வாசி தகவல் பொய்யானவைதான். எனவே எதையுமே யோசித்துப் பார்த்து அணுகி ஆராய வேண்டும். இந்த விசயங்களைத் தெரிந்துகொள்ள, உங்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி நீங்கள் படிக்க வேண்டும். முடிந்தவரை படியுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு தேவையற்றதை விட்டுவிடுங்கள்.

நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய, நல்ல தலைவர்களைத் தேர்வு செய்யப்போகிறீர்கள். ஆனால் நம்ம விரல வச்சு நம்ம கண்ணையே குத்துறதை கேள்விப் பட்டதுண்டா? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் இப்போது நாமும் செய்துகொண்டிருக்கிறோம். என்னவென்றால், பணம் வாங்கி ஓட்டு போடுவது. ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 என்று வைத்துக்கொள்வோம். ஒரு தொகுதிக்கு 1½ இலட்சம் பேருக்குப் பணம் கொடுக்கிறார்கள். ரூ.15 கோடி செலவு ஆகியிருக்குமா? ஒருத்தர் ரூ.15 கோடி செலவு செய்கிறார் என்றால், அதற்கு முன்னாடி எவ்வளவு சம்பாதித்திருப்பார்? இதையெல்லாம் யோசித்துப் பாருங்கள். இதெல்லாம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் பெற்றொரிடம் இனிமேல் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க… அப்படின்னு சொல்லிப் பாருங்கள். சும்மா… முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முயற்சித்தால் அது கண்டிப்பாக நடக்கும். ஏனெனில் வரும் ஆண்டுகளில் நீங்கள் முதல் தலைமுறை வாக்காளர்களாக வரப்போகிறீர்கள். இதெல்லாம் எப்போது நடக்குமோ, அப்போதுதான் உங்கள் கல்வி முறையே முழுமை அடைவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு சிறிய வேண்டுகோள். உங்கள் அருகே வசிக்கும் தேர்வில் வெற்றிபெறாத மாணவர்களிடம் பேசி தைரியம் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் அவர்கள் வெற்றி அடைந்தால், அது நீங்கள் எனக்குத் தரும் பரிசாக நினைத்துக் கொள்வேன். எந்தச் சூழ்நிலையிலும் மாணவர்கள் தவறான முடிவு எடுக்காமல், வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல வேண்டும்.

உன்னால் இது முடியாது என்று மட்டுப்படுத்தும் ஒரு கூட்டம் இருக்கும். அதைக் கண்டுக்கவே கண்டுக்காதீங்க. உனக்குள் ஒருவன் இருப்பான், அவன் சொல்வதைக் கேட்டுச் செய்யுங்கள். கல்வியை வளர்ப்போம்.

இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.

Leave a Response