அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த இரண்டு துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி வழங்குவது தொடர்பாக அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் ஏற்கவில்லை.ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் துறை மாற்றம் தொடர்பான முதல்வரின் பரிந்துரையை ஏற்றார்.
செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகளை கூடுதலாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால், தமிழக அரசே தனியாக ஒரு அரசாணையைப் பிறப்பித்து, செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேநேரத்தில் அமலாக்கத்துறை அவரைக் கைது செய்ததால், நீதிபதி மருத்துவமனைக்கே வந்து காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த 2 துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.
இது தொடர்பான கடிதத்தை ஆளுநருக்கு நேற்று முன்தினம் அனுப்பினார்.
அதில், மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் அளிப்பதாகத் தனது பரிந்துரையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த நிலையில், அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார். இந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்று அதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார்? என்ற விவரத்தைக் குறிப்பிடும்படி கேட்டு பரிந்துரைக் கடிதத்தை அரசுக்குத் திருப்பி அனுப்பி விட்டார்.
இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த அவசர ஆலோசனையில், ஆளுநர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நேற்றிரவு மீண்டும் கடிதம் அனுப்பி வைத்தார். அதில், நீங்கள் (ஆளுநர்) கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் துரதிருஷ்டவசமானவை. கடிதத்தைத் திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றியே தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துகளை நேற்று கேட்டறிந்தார். அதனால் உடனடியாக அவரது அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுக்கும் பட்சத்தில் நிர்வாக வசதிக்காக அமைச்சர்களின் இலாகா மாற்றத்துக்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அவ்வாறு அரசாணை வெளியிடும் பட்சத்தில் அதை வைத்து அதிகாரிகள் துறை ரீதியாக முடிவெடுக்க முடியும் என்று பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆளுநர் மாளிகையின் அரசு செயலாளர் ஆனந்த் பாட்டீல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு அரசின் பரிந்துரைக் கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது….
தமிழ்நாடு முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத் துறை, கூடுதலாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையானது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செந்தில் பாலாஜி கிரிமினல் வழக்குகளை எதிர் கொண்டு தற்போது நீதிமன்றக் காவலில் இருப்பதால் அவர் அமைச்சராகத் தொடர ஒப்புக் கொள்ள முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ‘‘யார் அமைச்சராகத் தொடரலாம் என்பதைக் கூற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அமைச்சரவையை அமைப்பதற்கான முழு அதிகாரமும் முதல்வரிடமே உள்ளது. ஆளுநரின் இந்த விவகாரத்தை திமுக சட்ட ரீதியாகச் சந்திக்கும். ஆளுநரின் முடிவு நிச்சயமாக அரசியல் சார்ந்தது தான். தீவிர ஆர்எஸ்எஸ்காரராகவும், பாஜவின் ஏஜென்ட் போலவும் ஆளுநர் செயல்படுகிறார். கூடுதல் இலாகா ஒதுக்கீடு விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் ஆளுநர். தண்டிக்கப்பட்டால் தான் ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது’’ என்றார்.
இந்தநிலையில், ஆளுநர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர அரசாணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்….
அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக மாற்றப்படுகிறது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு பதிலடி கொடுத்து வருவது ஒன்றிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.