செந்தில்பாலாஜி கைது – பாஜக நினைத்ததும் நடந்ததும்

நேற்று நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அதிரடியாகக் கைது செய்தது பற்றி ஏராளமான வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை…..

செந்தில்பாலாஜியைக் கைது செய்தால் திமுக மீது கெட்டபெயர் ஏற்படுத்தலாம், இந்த வழக்கையே காரணமாகக் காட்டி அவரை பாஜகவுக்கு இழுத்துவிடலாம் என்றெல்லாம் திட்டமிட்டது பாஜக.

ஆனால், நள்ளிரவு கைது என்றதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வலி என்று கதறினார் செந்தில்பாலாஜி. அந்தக் கதறலில் பாஜகவின் திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டன.

அதன்பின் ஒவ்வொரு அஸ்திரமாக ஏவிக்கொண்டிருக்கிறது திமுக.

2015 இல் போடப்பட்ட வழக்குக்கு நள்ளிரவில் கைது செய்யவேண்டிய அவசியம் என்ன?

ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்யவேண்டுமெனில் சட்டப்பேரவைத்தலைவருக்குத் தகவல் சொல்லவேண்டும்

என்பது உட்பட எதையுமே அவர்கள் கடைபிடிக்கவில்லை.

அதனால், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் செந்தில்பாலாஜியின் மனைவி. அது விசாரணைக்கு வந்தால் சிக்கல் பெரிதாகும் என்பதால் அதைத்தள்ளிப்போடும் முயற்சியாக இரண்டுநீதிபதிகளில் ஒரு நீதிபதி கடைசிநேரத்தில் விலகுகிறார்.

இப்படி அடிமேல் அடி வாங்கினாலும் செந்தில்பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்றக்காவல் என்பது அவர்களுக்கு ஆறுதலான ஒன்று. அங்கு போய், நெஞ்சுவலி என்பது பொய் என்று வாதம் வைத்ததும் நீங்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து சோதித்துக் கொள்ளுங்கள் என்று பதில் வந்ததும் திகைத்துப்போயிருக்கிறது தில்லி.

அமலாக்கத்துறையை வைத்துக் கைது செய்யப்போக, கடந்த ஒன்பதாண்டு கால மோடி ஆட்சியில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் என்னென்ன? அவற்றில் எவ்வளவு பொய்கள் இருக்கின்றன என்கிற வரலாற்றை எல்லாம் தோண்டி எடுத்துவிட்டது திமுக. இதனாலும் மக்கள் மத்தியில் அவப்பெயர்.

அதோடு போனதா? என்றால் இல்லை.

இந்திய ஒன்றியம் முழுதும் உள்ள தலைவர்கள் இக்கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கப் போக, ஏதோ சென்னையில் நம் திருவிளையாடலை நடத்தினால் தில்லியில் தெரியப்போகிறதா? என்கிற பாஜகவின் அலட்சியத்துக்கும் செமத்தியான அடி. பாஜக எப்படியெப்படியெல்லாம் அமலாக்கத்துறை போன்ற அரசுத்துறைகளை அடியாளாகப் பயன்படுத்துகிறது என்று ஆளாளுக்குப் பேசத்தொடங்கிவிட்டார்கள்.

இதனால், செந்தில்பாலாஜியைக் கைது செய்தது சட்டப்படியும் தப்பு அரசியல்படி மகாதப்பு ஆகிவிட்டது என்பதால் பாஜக மனமுடைந்து போயிருக்கிறது.

– சித்திரன்

Leave a Response