தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்தில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஒன்றிய அளவில் பல்வேறு தலைவர்கள் இதற்காக மோடி அர்சுக்குக் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது…..
திமுகவுக்கு எதிராக பாஜக மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கலை நான் கண்டிக்கிறேன். விசாரணை அமைப்புகளை பா.ஜ.க அரசு தவறாகப் பயன்படுத்துவது தொடர்கிறது. தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பாஜகவின் அவநம்பிக்கையான செயல்கள் ஆகும்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது…..
எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் ஒன்றிய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் பழிவாங்கலால் பாராமுகமாகி, நமது ஜனநாயகத்திற்கு மாற்ற முடியாத சேதத்தை பாஜக ஏற்படுத்துகிறது.
காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது….
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையை அப்பட்டமாக தவறாக பயன்படுத்தி நடத்திய சோதனையை காங்கிரசு கண்டிக்கிறது. இவை எல்லாம் மிரட்டுவதற்கும், தொந்தரவு செய்வதற்கும் மோடி அரசு மேற்கொள்ளும் வெட்கக்கேடான முயற்சிகள். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்துவது மோடி அரசின் முத்திரை. இதுபோன்ற செயல்களால் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி வெற்றி பெறாது. மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும் உறுதியை இவை எல்லாம் வலுப்படுத்துகின்றன.
தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார் கூறியிருப்பதாவது……
எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் இடைவிடாத நடவடிக்கைகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம், ஜனநாயக விரோத ஒன்றிய அரசுக்கு எதிரான குரலை நசுக்கும் மோசமான நோக்கத்துடன் அமலாக்கத்துறை இப்போது தென் மாநிலங்களுக்குச் சென்றுள்ளது.
இவ்வாறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.