பாண்டியரின் மீன் சின்னம் அகற்றம் – கி.வெங்கட்ராமன் கண்டனம்

மதுரையில் பாண்டியரின் மீன் சின்னம் அகற்றல். தொடர்வண்டித்துறையின் தமிழினப் பகைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

தமிழ்நாட்டு மக்களால் இன்றளவும் போற்றப்படுபவர்கள் மூவேந்தர்கள். அதில் மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். குறிப்பாக பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனால் உருவாக்கப்பட்டதுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில். அதுபோல் நீதிக்காக பாண்டிய மன்னனிடம் கண்ணகி வாதாடியதும் மதுரையில் தான்.

மதுரையில் 1981 ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் மூவேந்தர்களின் பெயரால் சேர, சோழ, பாண்டியர் தோரண வாயில்கள் உருவாக்கப்பட்டன.

அதுதவிர, குலசேகர பாண்டியனுக்கோ, கண்ணகிக்கோ எந்த அடையாளச் சின்னமும் தமிழக அரசால் இதுவரை நிறுவப்படவே இல்லை.

1999 ஆம் ஆண்டு பாண்டிய மன்னர்களின் நினைவைப் போற்றும் விதமாக மதுரை தொடர்வண்டி நிலையம் கிழக்கு நுழைவு வாயில் முன்பு ஒன்றோடு ஒன்று துள்ளிக் குதிக்கும் மூன்று மீன் கொண்ட வெண்கலச் சிலையை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நிறுவப்பட்டது. இந்த வெண்கல மீன் சிலைகள் 15 அடி உயரமும், 3 டன் எடையும் கொண்டவை.

இருபது வருடங்களாக நீடித்து நிலைபெற்று பார்ப்போரைக் கவர்ந்திழுத்து வந்த மூன்று மீன் சிலைகளையும் 2019 ஆம் ஆண்டில் தொடர்வண்டி நிர்வாகம் அகற்றியது.

தொடர்வண்டி நுழைவு வாயில் பகுதியில் பேருந்துகள் வந்து செல்வதற்கும், அழகு படுத்துவதற்கும் மீன் சிலைகளை அகற்றுவதாகக் கூறிய தொடர்வண்டி நிர்வாகமே தமது வளாக அறையில் சிலைகளைப் பூட்டி பாதுகாத்து வந்தது.

தொடர்வண்டி நிலைய மேம்பாட்டு வேலைகள் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் சிலை வைக்கும் முயற்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஈடுபட்டது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினரும், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும் தெற்கு தொடர்வண்டி கோட்ட மேலாளர் ஆனந்த் அவர்களைச் சந்தித்து மீன் சிலை வைப்பதற்கு அனுமதி கேட்டனர். அவரும் தேசியக் கொடிக் கம்பம் அருகில் உள்ள 100 அடி இடத்தில் சிலையை வைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தார்.

பின்னர் ஒரு வாரம் கழித்து சிலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் செங்கல் வைத்து கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், இரயில்வே கோட்ட தலைமைப் பொறியாளர் வில்லியம்ஸ் ஜோய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் அவர்களும், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும், “மீன் சிலை மட்டுமின்றி சிலையின் வலது மற்றும் இடது பக்கமாக தலா மூன்று வண்ண நீரூற்றுகளையும் அமைக்க உள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ரூ 20 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஒரு மாதத்தில் மக்களின் பார்வைக்கு சிலை வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் ஓராண்டாகியும் மீன் சிலை நிறுவப்படவில்லை. இதற்கிடையில் 2022 ஆம் ஆண்டு நவம்பரில் மீன் சிலையை வைக்கக் கோரி தமிழர் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது பதிலளித்த மதுரை தொடர்வண்டி கோட்ட நிர்வாகம் மீன் சிலை நிறுவப்பட்டு விட்டதாக பொய்யான தகவலைத் தெரிவித்தது. வழக்கும் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது.

தெற்கு தொடர்வண்டித் துறை தரப்பில் பொய்யான தகவலைத் தந்ததாகக் கூறி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.

2023 நவம்பர் 3 ஆம் நாளன்று நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஆர். விஜயகுமார் ஆகியோர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தெற்கு தொடர்வண்டித் துறை தரப்பில், மீன்கள் சிலையை வைத்த தொழில் வர்த்தக சங்கத்தினரே விரிவாக்கப் பணியின் போது எடுத்துவிட்டனர் என்றும், தொடர்வண்டி நிலையப் பகுதிகளில் தலைவர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை வைக்கக் கூடாது என்று தொடர்வண்டித் துறையின் சுற்றறிக்கை உள்ளதாகவும், இதனால், வேறு பகுதியில் மீன் சிலைகள் வைத்துக் கொள்ளுமாறு கூறி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாகும். 2021 ஆம் ஆண்டு தெற்கு தொடர்வண்டி கோட்ட மேலாளர் ஆனந்த் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் மீண்டும் மீன் சிலை வைப்பதற்காக செங்கல் வைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

1999 இல் மீன் சிலை வைப்பதற்கும், எடுத்த சிலையை 2021 இல் மீண்டும் நிறுவுவதற்கும் அனுமதி கொடுத்த தொடர்வண்டி நிர்வாகம் தற்போது தொடர்வண்டித்துறை விடுத்த சுற்றறிக்கையைக் காரணம் காட்டுவது ஏற்கும்படியாக இல்லை.

அண்மையில் தென்மேற்கு தொடர்வண்டித் துறை சார்பில் கர்நாடகா மாநிலம் ஹீப்ளி நிலையத்திற்குள்ளேயே காந்தி சிலையை தொடர்வண்டித் துறை கோட்ட மேலாளர் திறந்து வைத்துள்ளார். மேலும் அங்கு யோகி சித்தாரூத சுவாமிகள் சிலையும் உள்ளது. அது போல போபால் நிலையத்தில் ராணி கமலா பாட்டி சிலையும், மைசூர் நிலையத்தில் சிற்பக் கலைஞர் யுவராஜ் வடிவமைத்த சிலைகளும் பெல்லாரி நிலையத்தில் காந்தி சிலையும் உள்ளது.

இதுபோல், பல்வேறு தொடர்வண்டி நிலையங்களில் தலைவர்களின் சிலைகளும், நினைவுச் சின்னங்களும் நிறுவப்பட்டுள்ளன.

அவ்வாறு உள்ளபோது, திடீரென்று சுற்றறிக்கை இருப்பதாகக் கூறி மதுரை தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் பாண்டியர்களின் மீன் சிலையை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று வாதிடுவது அப்பட்டமான தமிழின பண்பாட்டு அடையாள எதிர்ப்பு நிலையாகும்.

உடனடியாக தெற்கு தொடர்வண்டி கோட்ட நிர்வாகம் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நிறுவிய மீன் சிலையை அதே இடத்தில் நிறுவிட அனுமதிக்க வேண்டும்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளச் சின்னமான மீன் சிலையை நிறுவுதற்கு தமிழ்நாடு அரசும் இதில் தலையிட வேண்டுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response