இராகுல் திரும்ப வருவார் பிரதமராக! – சுபவீ உறுதி

2019 ஆம் ஆண்டு, கர்நாடகத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய போது, லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார் என்பதைக் காரணம் காட்டி குஜராத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.

எனினும் மேல் முறையீட்டிற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளித்து, நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அந்த ஒரு மாதம் கூட காத்திருக்கப் பொறுமை இல்லாமல், ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய சர்வாதிகாரம் என்று சொல்லி, நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்திருக்கிறது!

ஆனால் இதை நாம் இன்னொரு கோணத்தில் அணுக வேண்டும் என்று தோன்றுகிறது! சர்வாதிகாரிகள் இப்படித்தான் சில நேரங்களில் அவசரப்பட்டுத் தங்களைத் தாங்களே அடையாளம் காட்டிக் கொள்வார்கள். இப்படி அவர்கள் அம்பலப்பட்டுப் போய் இருப்பதை, வரலாற்றில் பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும். பொதுவெளியில் சர்வாதிகாரிகள் அம்பலப்பட்டு அகப்பட்டுக் கொள்வதுதானே நாட்டிற்கு நல்லது!

இந்தப் பதவிப் பறிப்பு நடவடிக்கை இல்லை என்றால், யாரோ ஒருவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது. அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லி தப்பிக்க முயற்சி செய்வார்கள். அந்தத் தீர்ப்பு சரியானதா, இல்லையா என்ற விவாதம் தொடங்கும் என்றாலும், அது பாஜக போன்ற சர்வாதிகார அரசியல் போக்குடைய கட்சியை நேரடியாகப் பாதிக்காது!

இப்போது நீதிமன்றமே ஒரு மாத காலம் தண்டனையை நிறுத்தி வைத்திருக்கும் போது, இவர்கள் ஏன் அவருடைய பதவியைப் பறித்தார்கள் என்னும் கேள்வி மேல் எழுந்து நிற்கும்! அங்குதான் அவர்களின் சர்வாதிகார முகம் சட்டென்று புலப்படும்!

அவர்கள் செய்துள்ள செயல் எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு – காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்க்கும் மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், கேரளத்தில் எதிர்த்து நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் கூட, இப்போது ராகுல் மீதான இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள்! எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியைத் தான் அறியாமலேயே பாஜக இப்போது செய்து முடித்திருக்கிறது!

எதிர்க்கட்சிகளை விடுங்கள், பொதுமக்கள் இடையே கூட, இது ஒரு மோசமான நடவடிக்கை என்பது வெளிப்படையாகப் போய்ச் சேரும் வாய்ப்பு இப்போது வந்துள்ளதே! அதானி பற்றி ஒரு விசாரணை நடத்துவதற்கு கூட முன் வராமல், ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கும் ஆளும் கட்சி, எப்போதோ பொதுக்கூட்டத்தில் கிண்டலாக பேசிய ஒரு பேச்சுக்கு உடனடியாகப் தகுதி நீக்கம் என்னும் அளவிற்குக் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றால், என்ன பொருள்? இது ஓர் அறம் பிறழ்ந்த செயல் என்பதுதானே அதன் பொருளாக இருக்க முடியும்! அதனை இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்களே! இதனை விடப் பெரிய நன்மை வேறு என்ன விளைந்து விட முடியும்?

மிகக் கடுமையாகத் தன் உடலை வருத்திக் கொண்டு, ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடத்திய ஒற்றுமை நடைப்பயணம் கூட தர முடியாத மிகப் பெரிய பயனை, இந்தப் பதவி நீக்கம் தந்துள்ளது என்றே கருதலாம்!

ராகுல் காந்தியைச் சிறையில் அடைத்தால் என்ன? திரும்பி வருவார் – இந்தியாவின் பிரதமராக! எனவே ராகுல் காந்தியின் பதவி பறிப்பு என்னும் இந் நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வரவேற்போம்!!

– சுப வீரபாண்டியன்

Leave a Response