சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் முன்னான் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஓ.பி.எஸ். அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆலோசனைக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் 87 மாவட்டச் செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டபிறகே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது கூறியதாவது………
அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்குத் தெரியும். அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன்.தன் இரும்புப்பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது.
எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள்.முன்வரிசையில் நாங்கள் நின்று, எதிர்வரும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம். “வேட்புமனுவை வாபஸ் பெற்று இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை” மக்கள் தீர்ப்பு எனும் மகேசன் தீர்ப்பு இருக்கிறது, அது கூடிய விரைவில் வரும்;வாக்கு எண்ணிக்கையின் போது அது தெரியவரும். அதிமுக சட்டவிதியை எந்தளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரை மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்ய முடியாது
இவ்வாறு அவர் பேசினார்.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*சர்வாதிகார மற்றும் சதிகாரக் கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும்.
* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்த முடிவு.
*அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்
*மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.