கியூபாவுக்கு அமெரிக்கா செய்யும் அட்டூழியங்கள் – சேகுவாரா மகள் தரும் அதிர்ச்சித்தகவல்கள்

சென்னை பாரி முனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு இணைந்து நடத்திய விழாவில் புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா,பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோருக்க் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியும், சோசலிச
கியூபாவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியும்
நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் முத்தரசன், கியூபா ஒருமைப்பாட்டுக் குழுவின் இந்திய தலைவர் பேபி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய
குழு உறுப்பினர் வாசுகி, தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எச்.ஜவஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், கனிமொழி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சேகுவாராவின் மகள் அலெய்டா குவேரா பேசியதாவது…..

தோழர்களே, காம்ரேட்களே 5 ஆண்டுகளுக்கு முன் நான் இந்தியாவிற்கு வந்தேன், நான்
அந்த அன்பை மறக்க மாட்டேன்.

தைரியமாகக் களத்தில் இருக்க வேண்டும் என்று என் தாய் சிறு வயதில் சொல்லிக்கொடுத்தார். நான் சேகுவாரா மகளாக இருப்பதால் அதிக அன்பைப் பெற்றேன். ஆனால் நான் யாருடைய மகள் என்பது முக்கியமில்லை நான் யாராக இருக்கிறேன் என்பதுதான் முக்கியம்.

நான் சேகுவாரா மகளாக இருப்பதில் பெருமைபடுகிறேன் அதற்கு மட்டுமல்ல அதே போல் என் தாய்க்கு மகளாக இருக்கவும் பெருமைப்படுகிறேன். இன்று நான் சமூகத்திற்குப் பயனுள்ளவளாக இருப்பதற்கு என் தாய் தான் காரணம். நான் களத்தில் காலூன்றி உறுதியாக நிற்க வேண்டும் என்று என் தாய் சொல்லி இருக்கிறார்.

சிறிய யானையை என் மகளுடன் எங்கள் நாட்டில் பார்த்துள்ளோம். என் மகள் இந்தியாவில் அதிக யானைகள் இருப்பதை அறிந்து அதன் புகைப்படம் கேட்டாள், எனக்குக் கேரளாவில் பெரிய யானையை காம்ரேட்கள் காட்டினர். நான் போராளியின் மகள் என்பதால் தைரியமாக யானை மீது பயணம் செய்வேன் என்று என்னை ஏற்றி விட்டார்கள்
நான் அந்த யானை மீது பயணித்த அந்த 15 நிமிடங்கள் என் வாழ்வில் மறக்கமுடியாத
சிறப்பான நேரம்.

அத்துடன், இந்தியாவில் எங்கு போனாலும் என் மூக்கு வரை மாலைகள் இருக்கும் இன்று, நீங்கள் எனக்கு அளித்த சால்வைகள் மூலம் உங்கள் அன்பை என்னால் உணர முடிந்தது. அதை நான் இங்கு விட்டுச் செல்ல மாட்டேன். நான் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ளேன் காம்ரேட்கள் உடன் இந்த சால்வையை பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

நாம் கூடியிருப்பது ஒற்றுமைக்காக, ஒருமைப்பாட்டுக்காக இடதுசாரிகள் உலகெங்கிலும் இப்படிப்பட்ட ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைக் கட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.நாம் என்ன செய்தாலும் அதிலே ஒரு பொது நோக்கம் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இந்த நாட்டின் பெயர் என்ன என்று உரக்கச் சொல்லச் சொன்ன போது, தமிழ்நாடு என்று உரக்கக் குரல்கள் கேட்டன. இந்த தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது. அதே போல் எந்தப் பொது நோக்கமாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

கியூபா இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு உங்களைப் போன்ற மக்கள் மத்தியில் ஒருமைப்பாடு வேண்டி இருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா நாட்டின் மீது தாக்குதல்களை ஏற்படுத்தி எங்கள் பொருளாதாரத்தைப் பாதிப்படையச் செய்துள்ளது. கியூபா நாட்டு மக்களின் வாழ்க்கையைச் சிரமத்திற்கு உள்ளாக்கியது. அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ன நினைக்கிறது என்றால் அவர்கள் வைத்தது தான் சட்டம்.அவர்கள் சட்டம் எல்லை தாண்டி எல்லா இடங்களிலும் அமலாகும் அது உரிமை என்று நினைக்கிறார்கள்.

கியூபா நாட்டில் சிறந்த பல விசயங்கள் உள்ளன. அவற்றை வெளியே எடுத்துச் செல்வதற்கு எங்களிடம் விமானம் இல்லை, நாங்கள் விமானத்தை வாடகைக்குத் தான் வாங்க வேண்டும். அதுவும் குறுகிய கால ஒப்பந்தம் தான் செய்ய முடியும். ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட உள்ளோம் என்று தெரிந்தால் அமெரிக்கா அதில்
தலையிட்டு ஏராளமான விதிகளைப் போடும். அதன் உதிரி பாகங்களில் 10 சதவிகிதம் அமெரிக்கப் பொருள்களாக இருந்தால் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யக்கூடாது எனச் சொல்லும்.

எங்கள் மீது மட்டுமல்ல எங்களோடு வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்படுகிறது. நாங்கள் மேம்பட வேண்டும் என்றால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும். நாங்கள் அமெரிக்காவோடும் வியாபாரம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் சமமான அந்தஸ்தில் வியாபாரம் செய்வோம். எங்களோடு வியாபாரம் செய்ய மறுப்பது அமெரிக்காவின் உரிமை, ஆனால் எங்களோடு வியாபாரம் செய்யும் நிறுவனங்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுக்கு உரிமை இல்லை.

எந்தக் கப்பலும் எங்கள் கடற்கரைக்கு வருவதற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள். இப்படி ஏராளமான தடை இருந்தாலும் ஒன்றை மட்டும் தடுக்க முடியவில்லை. அதுதான் கியூபா மக்களின் வாழ்வதற்கான உரிமை. கியூப மக்களின் மகிழ்ச்சியையும் வாழ்வுரிமையும் அவர்களால் பறிக்க முடியாது. இது நீடுழி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சோசியலிசம் சமூக அமைப்பைப் பின்பற்றுகிறோம். புதிய குடும்ப நலச் சட்டத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டி இருக்கிறோம். பெண்களுடைய பாதுகாப்பிற்கு ஏராளமான உத்தரவாதங்கள் இருக்கின்றன.

இன்று நாம் வாழும் உலகம் ஏராளமான முரண்பாடுகள் சூழ்ந்த உலகமாக இருக்கிறது. இது ஒரு மேம்பட்ட உலகமாக மாற வேண்டும் என்பதற்காகத்தான் நீங்களும் போராடுகிறீர்கள். நாங்களும் போராடுகிறோம்.தூரம் என்பது இந்தியாவிற்கும் கியூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் ஆனால் கியூப மக்களும் இந்திய, தமிழக மக்களும் சகோதரர்கள் தான்.

மேலும், என் தந்தை இறந்த போது பலர் அழுதனர். ஒருவரை இழந்தால் உலகம் வருத்தப்படும் என்பது உண்மைதான். வருத்தம் கண்ணீரால் மட்டுமல்ல போராட்டத்தின் மூலமாகவும் வெளிப்படுத்த முடியும், நான் இறந்தால் எனக்காக அழாதீர்கள் நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடருங்கள் உங்களில் நான் இருப்பேன் என்று ஒரு பாடல் சொல்கிறது. நாம் ஒருமைப்பாட்டுக்காக ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response