முசுலிம் சமுதாயத்தைக் குறி வைத்து தாக்குதல் – பழ.நெடுமாறன் கண்டனம்

அரசியல் சட்ட மாண்பிற்கு விடப்பட்ட அறைகூவல் என்று கூறி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்…..

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று நள்ளிரவில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சிகளின் அலுவலகங்கள் தேசிய புலனாய்வு முகமையால் சோதனையிடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

சோதனையிடுவதற்கான ஆணைகளை காட்டாமலும், அனுமதியின்றி வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்தும், இச்சோதனைகள் நடைபெற்றுள்ளன. மக்களை அதிர வைத்த இந்நிகழ்ச்சியின் அலைகள் ஓய்வதற்கு முன்னர் இரண்டாம் முறையாக செப்டம்பர் 27ஆம் தேதி அன்று மீண்டும் தேசிய புலனாய்வு முகமை பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தி 250க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது.

தேசிய புலனாய்வு முகமை இச்சோதனைகளை நடத்துவதற்கு முன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கோ அல்லது மாநிலக் காவல்துறைக்கோ தெரிவிக்காமலும், அதிரடியாக இக்கைதுகளை நடத்தியுள்ளது அரசியல் சட்ட மாண்பிற்கும், கூட்டாட்சி முறைக்கும் விடுக்கப்பட்ட அறைகூவலாகும். பகல் வேளையில் சோதனை நடத்தாமல் நள்ளிரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது ஏன்?

பா.ச.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் மாநிலக் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டு அவற்றின் ஒத்துழைப்புடன் தேசிய புலனாய்வு முகமை இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இவ்வாறு செய்யவில்லை. மொத்தத்தில் முசுலீம் சமுதாயத்தைக் குறி வைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்துடனும், அமைதியாகவும் வாழும் மக்களிடையே அச்சமூட்டும் வகையிலும் நாட்டில் மதக் கலவரங்களை மூட்டும் நோக்கத்துடனும் சனநாயக ரீதியாக செயல்படும் அமைப்புகளை சீர்குலைப்பதற்கும் இந்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response