காந்தி விவேகானந்தரை என்ன செய்வீர்கள்? – விடுதலை இராசேந்திரன் கேள்வி

வேதங்களும்,ஆகமங்களும் பார்ப்பனரல்லாத மக்களை சூத்திர்களாக இழிவுபடுத்துகிறது என்று ஆ.இராசா கூறியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியினரும்,சங்கிகளும் பொங்கி எழுகிறார்கள்.இந்துக்களை புண்படுத்தி விட்டதாகக் கூக்குரல் இடுகிறார்கள். உண்மையிலேயே இந்துக்களை இழிவுபடுத்துவது ஆகமங்களும் வேதங்களும் தான்.ஆங்காங்கே ஆ.இராசாவின் உருவ பொம்மைகளை எரிக்கக் கிளம்பியிருக்கிற கூட்டத்தைப் பார்த்து நாம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி,இதை எதிர்த்த ஆதிசங்கரரைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

இந்து மதத்தினுடைய கர்த்தாக்களில் ஒருவரான ஆதிசங்கரர் அத்வைதத்தை வலியுறுத்தியவர்.அவர் சொல்கிறார், “ஆகமங்கள் பொய்களின் திரட்டு. பொய்களை வைத்து கடவுள் என்ற உண்மையை பூஜிக்க செய்யலாமா ? இப்படியெல்லாம் ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டு இருந்தால் மோட்சமும் கிடைக்காது,
கடவுளிடமும் நெருங்க முடியாது”என்று ஆகமத்தையும்,வேதத்தையும் கடுமையாக எதிர்த்தவர் ஆதிசங்கரர்.
இவர் இந்துக்களைப் புண்படுத்துகிறார் என்று சொல்லி ஆதிசங்கரரின் உருவ பொம்மையை எரிப்பார்களா ?

அதே போல் மனுதர்மம் பேசுகிற பிராமணர்களுடைய அடையாளமான பூணூலும்,உச்சிக்குடுமியும் தனக்குத் தேவை இல்லை என்று சொல்லி தலையை மொட்டை அடித்துக் கொண்டு பூணூலை அறுத்து எறிந்தவர் தான் ஆதிசங்கரர்.

ஆதிசங்கரரும் வேத மதத்தைப் புண்படுத்தி விட்டார் என்று இவர்கள் கூறுவதற்குத் தயாராக இருக்கிறார்களா ?
அது மட்டுமின்றி இந்த ஆகமம் எப்படி இழிவுபடுத்துகிறது என்பதை,அக்னி கோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

பாஞ்சாதர ஆகமம் என்ற ஒரு ஆகமம். அந்த ஆகமம் “திருஷ்டவா தேவஹா பாலயாதே”என்ற ஒரு ஸ்லோகத்தை சொல்லுகிறது.இதனுடைய பொருள் “பல ஆச்சார அனுஷ்டான அடிப்படையில் பகவானை விக்கிரங்களில் இறுத்தி வைத்து இருக்கிறோம்.இந்தப் புனிதமான கோயிலுக்குள் ஒரு சூத்திரனோ பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால் கூட ஆஷ்டானங்கள் கறை பட்டு விடும். அதனால் அந்த விக்கிரங்களில் இருந்து பகவான் ஓடிப்போய் விடுவான்” என்று‌ ஆகமம் கூறுகிறது.இதைவிட வெகுமக்களை இழிவுபடுத்துக்கிற ஸ்லோகம் வேறு எதாவது இருக்க முடியுமா?

“அப்படி பஞ்சமர்களும்,சூத்திரர்களும் கோயிலுக்குள் விட்ட காரணத்தினால் தான்‌ அந்தத் தீட்டைக் கழிப்பதற்காகத் தான் இப்போதும் ‘சம்ப்ரோக்க்ஷனம்’ என்ற‌ கும்பாபிசேகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்” என்று அக்னி கோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் கூறி இருக்கிறார்.ஆக கும்பாபிசேகம் நடத்தி கோயிலுக்குள் வருகின்ற பார்ப்பனரல்லாத இந்து மக்களை அதனால் தீட்டுப்பட்டு விட்டது என்று சொல்லி அவமானப்படுத்துகிற கூட்டம் இதை சுட்டிக் காட்டுகின்றவர்களைப் பார்த்து இந்து மதத்தைப் புண்படுத்தி விட்டார்கள் என்று கூக்குரல் இடுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது ?

அதே போல் இவர்கள் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடும் விவேகானந்தரும் கூட, “நான் பூணூல் அணிய மாட்டேன், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியதோடு சூத்திரர்கள் நீக்ரோக்களை விட அடிமைகளாக இந்த நாட்டில் நடத்தப்பட்டு இருக்கிறார்கள்‌. அந்த வேறுபாடுகளை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று வெளிப்படையாக அறிவித்து பூணூலை அணிய மறுத்து மனுதர்மத்தை எதிர்த்து இருக்கிறார்.காந்தியார் பூணூல் அணிய மறுத்து மனுதர்மத்தை எதிர்த்து இருக்கிறார்.

இவர்களுடைய உருவங்களையும் சேர்த்து இந்து முன்னணிகளும் பார்ப்பனர்களும் எரிப்பார்களா?
இராசா மீது பாய்கின்ற இந்த கூட்டம் இதற்கு பதில் சொல்லட்டும்.

– விடுதலை இராசேந்திரன்

Leave a Response