“தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்தது எப்போது? எதற்கு?

“தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்த நாள் 11.9.1938

1938 ஆம் ஆண்டு தமிழகப் பள்ளிகளில் கட்டாய இந்தியை இராசாசி கொண்டு வந்து புகுத்தினார். அதனை எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுத்தவர்கள் தமிழறிஞர்கள் ஆவார்கள்.

10.8.1937 இல் கட்டாயப் பாடத் திட்டத்தை இராசாசி அறிவித்த போது தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்ச்சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ்க்கழகம் சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

27.8.37 இல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழவேள் உமா மகேசுவரனார் தலைமையில் கட்டாய இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. 5.9.1937 இல் சென்னையில் நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாத்துரை ஆகியோர் பேசினர்.

28.5.1938 இல் இந்தி கட்டாயப் பாட உத்தரவை எதிர்த்து திருச்சியில் மந்திராலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியைக் கட்டாயப் பாடமாக வைக்கப் பெறும் பள்ளிக்கூடங்கள் உள்ள ஊர்களுக்குச் சென்று பரப்புரை செய்ய இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டது.

வாரியத் தலைவராக பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும், அதன் உறுப்பினர்களாக த.வே.உமா மகேசுவரனார், ஊ.பு.செளந்தர பாண்டியனார், பெரியார் ஈ.வெ.ராமசாமி, கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1938 இல் ஆகஸ்டு 1 இல் திருச்சி முதல் சென்னை வரை தமிழர் பெரும்படை நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நடைபயணம் முடிவடைந்த பிறகு திருவல்லிக்கேணிக் கடற்கரையில் பெருங்கூட்டம் நடைபெற்றது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அலையெனத் திரண்டனர்.

அக்கூட்டத்திற்கு தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் தலைமை வகித்தார். 4.10.37 இல் சென்னை கோகலே மன்றத்தில் நடைபெற்ற பெருங்கூட்டத்திற்கும், 3.6.38 இல் கோடம்பாக்கத்தில் கூடிய இந்தி ஒழிப்பு மாநாட்டிற்கும் மறைமலையடிகள் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாகாணம் மொழிவழி மாகாணமாக பிரிக்கப்பட வேண்டுமென்று அனைவரும் முழங்கி வந்த நிலையில், சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் “தமிழ்நாடு தமிழருக்கே” எனும் முழக்கம் பீறிட்டுக் கிளம்பியது.

அந்த முழக்கத்தை முதன்முதலாக ஒலிக்கச் செய்தவர் மறைமலையடிகள்.

இது குறித்து நெடுஞ்செழியன் தான் எழுதிய நூலொன்றில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:

“இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தமிழகம் தனியே பிரிய வேண்டும் என்ற கருத்து இந்தி எதிர்ப்பின் விளைவாக 1938 இல் உருவாகியது. இந்தியாவின் தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், பொதுமொழியாகாவும் ஆக்கிடும் நோக்கத்தில் தமிழகத்தில் கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நோக்கில், தமிழார்வம் கொண்ட பேரறிஞர்களும், பொதுமக்களும் அந்தக் கட்டாய இந்தியைத் தீவிரமாக எதிர்க்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஓங்கி வளரத் தொடங்கியது. 1937 ஆம் ஆண்டில் ஆச்சாரியார் முதலமைச்சராக இருந்த காலத்தில் தோன்றிய இந்தி எதிர்ப்பு இயக்கம் மக்களின் உள்ளத்தில் தமிழார்வத்தையும், தமிழனின் பண்டையப் பெருமைகளையும், அவன் ஆண்டு புகழ் பெற்ற வரலாறுகளையும், தமிழிலக்கியங்களின் சிறப்புகளையும் தூவியது.

வடநாட்டு அரசியல் ஆதிக்கத்தையும், பொருளாதார ஆதிக்கத்தையும், வணிக ஆதிக்கத்தையும் நாளடைவில் தமிழ்ப் பேரறிஞர்களுக்கு உணர்த்திற்று. அதன் விளைவாக, 1938 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் கூட்டப் பெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் மறைமலையடிகள் ஆவார்கள். அதனை வழி மொழிந்து பேசியவர்கள் பெரியார் ராமசாமி, ச.சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆவார்கள்.” (நெடுஞ்செழியன் எழுதிய தி.மு.க.வரலாறு நூலிலிருந்து)

தமிழறிஞர்கள் தலைமையில் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தான் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் வளர்வதற்கான அடித்தளத்தை உருவாக்கியது. அது மட்டுமல்ல, தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அணி திரள வேண்டிய தேவையையும் இது உருவாக்கியது.

தமிழறிஞர்கள் முன்னெடுத்து நடத்தி வந்த இந்தப் போராட்டத்தை திசை மாற்றவும் திராவிட இயக்கங்கள் தயங்க வில்லை. “திராவிட நாடு திராவிடருக்கே” என்று மாற்றி முழங்கின. பின்னர் மொழிவழி மாகாணம் பிரிக்கப்பட்டதும் ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்பது செத்துப் போன முழக்கமாகி அது கைவிடப்பட்டது என்பது தான் வரலாறு.

தற்போது தமிழ்நாடு மார்வாடி, குசராத்து சேட்டுகள், மலையாளிகள் போன்ற வந்தேறி இனங்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்திட “தமிழ்நாடு தமிழருக்கே” என்னும் முழக்கத்தை இந்நாளில் முன்னெடுத்து தமிழ்த் தேசிய இறையாண்மையை வென்றெடுப்போம்.

– கதிர் நிலவன்

Leave a Response