தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரிப்புக்கு ஒன்றிய அரசே காரணம் – பொன்முடி அதிரடி

தமிழகத்தில் போதைப் பொருள் இந்த அளவு பரவியதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என்று அமைச்சர் பொன்முடி வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதுகுறித்துக் கூறியதாவது….

ஒன்றிய அரசால் தான் போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. ஒன்றிய அரசு இதுவரை போதைப் பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் தமிழகத்தில் போதைப் பொருள் அதிக அளவு பரவி உள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் வருகின்றன. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மட்டும் ஏராளமான போதைப்பொருள்கள் பிடிபட்டுள்ளன.

குஜராத் நீதிபதி ஒருவரே அந்த மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகமாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
விற்பனையைத் தடுக்க முந்தரா துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்துமாறு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இருப்பினும் ஒன்றிய அரசு இதுவரை போதைப் பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால்தான் தமிழகத்தில் போதைப் பொருள் அதிக அளவு பரவி உள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கைகளால் ஒரே ஆண்டில் 152 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.2.88 கோடி மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தி வருவதைத் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்துச் சமுதாயத்தினரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. மதவெறியைத் தூண்டி விடுபவர்கள் பாஜகவினர் தான். எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல திமுக.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response