இந்திய ஒன்றியத்தின் 15 ஆவது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு தேர்வு

இந்திய ஒன்றியத்தின் உயரிய பதவி என்று சொல்லப்படுவது குடியரசுத்தலைவர் பதவி. அப்பதவியில் தற்போது இருப்பவர் இராம்நாத் கோவிந்த். 14 ஆவது குடியரசுத்தலைவரான அவரது பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

எனவே, புதிய குடியரசுத்தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடந்தது.

இத்தேர்தலில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளராக, ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரவுபதி முர்முவை (வயது 64) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதேநேரம், ஒன்றிய அரசுக்கு எதிராக்க் களமிறங்கிய எதிர்க்கட்சிகள், முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவை வேட்பாளராகக் களமிறக்கின.

இத்தேர்தலுக்காக, பிரதான வேட்பாளர்களாக களமிறங்கிய திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா இருவரும் மாநிலங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.

இதன் தொடர்ச்சியாக ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. பாராளூமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க நாடாளுமன்றத்திலும், சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க நாட்டின் 30 இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதிலும் உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 4,800 ஆக இருந்த நிலையில், இதில் 99 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்

இத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு 208 ஆகவும், தமிழ்நாடு, ஜார்கண்டில் தலா 176, மராட்டியத்தில் 175, மேற்கு வங்காளத்தில் 151 ஆகவும் உள்ளது.

இவ்வாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஓட்டுமதிப்பு 10 இலட்சத்துக்கு மேல் உள்ளது.

நேற்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, 64 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 6,76,803 வாக்குகள் பெற்றிருந்தார். அதேநேரம் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு 3,80,177 வாக்குகள் கிடைத்தன.

இதை தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதனால், இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15 ஆவது குடியரசுத்தலைவராக ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கிறார்.

Leave a Response