அடாத மழையிலும் விடாத போராட்டம் திகைத்த காவல்துறை – கோவையை அதிரவைத்த த.தே.பேரியக்கம்

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அஞ்சலகங்களில் பணியாற்றுவதற்காக அண்மையில் எடுக்கப்பட்ட 946 பேரில், பெரும்பாலானவர்கள் வெளி மாநிலத்தவர்கள். திட்டமிட்ட முறையில், இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் இந்திய அரசால் தமிழ்நாட்டில் இவ்வாறு தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனைக் கண்டித்தும், தமிழ்நாட்டுத் தொழில் – வணிகம் – வேலை தமிழருக்கே என தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டுமெனக் கோரியும், 2022 சூலை 11ஆம் நாள், கோவையிலுள்ள இந்திய அரசு அஞ்சலத்துறைத் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது. அதன்படி, நேற்று (11.07.2022) நடந்த முற்றுகைப் போராட்டம், கோவையை அதிர வைத்தது.

முற்றுகைப் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்று காலையிலிருந்தே, கோவை இரத்தினசபாபதிபுரம் (ஆர்.எஸ். புரம்) பகுதியில் அமைந்துள்ள அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம் முன்பு பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். நான்கு முனை சாலையில் ஒருமுனையில் அமைந்திருந்த அந்த அலுவலகத்தை, காவல்துறையினர் முழுவதுமாக சூழ்ந்து கொண்டனர்.

இன்னொருமுனையில், முற்றுகைப் போராட்டத்திற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் அணி அணியாக வந்து சேர்ந்தனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் போராட்டம் நடக்குமிடத்திற்கு வந்ததும், எழுச்சி முழக்கங்களோடு அனைவரும் அஞ்சல்துறை தலைவர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை முழக்கங்கள் எழுப்பினார்.

“பறிபோகுது பறிபோகும், தமிழர் தாயகம் பறிபோகுது”, “வெளியேற்று வெளியேற்று வெளியாரை வெளியேற்று”, “வேலை வழங்கு வேலை வழங்கு மண்ணின் மக்கள் தமிழருக்கே வேலை வழங்கு”, “தமிழ்நாடு வேலை தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்று!” என்பன உள்ளிட்ட முழக்கங்கள், மார்வாடிகள் நிறைந்துள்ள ஆர்.எஸ். புரம் பகுதியில் – அந்நான்கு முனைச் சாலையின் நாற்புரத்திலும் நின்றிருந்த மக்களை உற்று நோக்க வைத்தது.

ஏழு மாதக் குழந்தை முதல் எழுபது அகவை முதியவர் வரை என பல தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். பேரணி தொடங்கும் நேரத்தில் மழைபெய்தும்கூட, ஒருவர் கூட சலசலக்காமல் முழக்கங்களோடு, கையில் கோரிக்கைத் தட்டிகள் ஏந்திக் கொண்டு அனைவரும் நின்றதைப் பார்த்து காவல்துறை திகைத்துப் போனது.

அஞ்சல்துறை அலுவலகத்தை அடைந்துவிடாமல் தடுக்க காவலர்கள் கயிறுகள் போட்டு சூழ்ந்து நின்றபோதும், பேரியக்கத்தின் செஞ்சட்டை சீருடை அணிந்த இளைஞர்கள், தடைகளைத் தகர்த்துவிட்டு முன்னேறினர். அவர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்திய போது, சாலையிலேயே படுத்து முழக்கமெழுப்பினர். அங்கு காவல்துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஆனது.

இதனையடுத்து, அனைவரையும் கைது செய்வதாக அறிவித்த காவல்துறை, தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனங்களில் அனைவரையும் ஏற்றிக் கொண்டு சென்றனர். கோவை லாரி உரிமையாளர் சங்கத் திருமண மண்டபத்தில் அனைவரையும் அடைத்து வைத்தனர். அங்கு, மாநாடு போல் போராட்டக் கோரிக்கையை விளக்கி தலைவர்கள் உரையாற்றினர்.

பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன் போராட்ட ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். பேரியக்கத் துணைத் தலைவர் க.முருகன், துணைப் பொதுச்செயலாளர் க.அருணபாரதி, மகளிர் ஆயம் தலைவர் அருணா, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, தஞ்சை பழ.இராசேந்திரன், பூதலூர் ஒன்றியம் பி.தென்னவன், திருச்சி வே.க.இலக்குவன், பெண்ணாடம் மா.மணிமாறன், குடந்தை விடுதலைச்சுடர், புதுச்சேரி இரா.வேல்சாமி, திருச்செந்தூர் மு.தமிழ்மணி, மதுரை கதிர்நிலவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை பழ.நல்.ஆறுமுகம், திருச்சி பாவலர் நா.இராசாரகுநாதன், சிதம்பரம் சுப்ரமணிய சிவா, தென்காசி கா.பாண்டியன், குமாரபாளையம் நா.ஆறுமுகம், வெண்ணந்தூர் த.அகத்தாய்வன், அரியலூர் மு.வடிவேலன், தொரவி முருகன், ஈரோடு குமரேசன், கோவை விளவை இராசேந்திரன், தெள்ளியன், அவிநாசி பிரசாந்த், திருப்பூர் ஸ்டீபன்பாபு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பேரியக்கத்தினர் 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகினர்.

முற்றுகைப் போராட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாக இருந்ததும், பெண்கள் பெருமளவு பங்கேற்றுக் கைதானதும் குறிப்பிடத்தக்கது. கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தவர்களிடையே மதுரை மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் மதுரை சந்திரா பாடல் பாடினார். நிலா பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினார்.

இதனையடுத்து, போராட்டத்தின் நோக்கங்களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் திசைவழியையும் விளக்கி த.தே.பே. துணைப் பொதுச்செயலாளர் க.அருணபாரதி, NERD தொண்டு நிறுவனப் பொறுப்பாளர் பேராசிரியர் காமராசு, கோபாலாகிருட்டிணன் (இளைய தலைமுறைக் கட்சி), இமயம் சரவணன் (தமிழர் முன்னணி), அப்துல் வகாப் (நா.த.க. மண்டலச் செயலாளர்), மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, தமிழ்த்தேசியப் பேரியக்க உறுதிமொழியை மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோ.மாரிமுத்து முன்மொழிய அரங்கம் அதிர அனைவரும் வழிமொழிந்தனர். முற்றுகைப் போராட்டத்திற்கு நிதி, பரப்புரை, நட்புகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல பணிகளில் துணை நின்றதற்காக கோபாலகிருட்டிணன், காமராசு, இமயம் சரவணன், அப்துல் வகாப், பல்லடம் வள்ளுவர் பண்பாட்டு நடுவம் தமிழரசன் உள்ளிட்டோரைப் பாராட்டி பொதுச்செயலாளர் கி.வெ. நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.

கைதாகாமல் போனாலும், முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்று நேரடியாக வாழ்த்துகளைத் தெரிவித்த கோவை – திருப்பூர் வணிகர் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு தமிழின அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் அமைப்பு நண்பர்களோடு வந்து பங்கேற்றது கவனிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே என சட்டமியற்றப்படும் வரை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்ற அறிவிப்போடு கலைந்து சென்றனர்.

Leave a Response