மேடையில் ஈபிஎஸ் தனியறையில் ஓபிஎஸ் – அதிரடி பேட்டி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வந்து ஆதரவு திரட்டினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்,ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக. சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக. பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் ஈபிஎஸ் அமர்ந்த நிலையில், ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை.நிகழ்ச்சி நடைபெறும் விடுதியில் தனி அறையில் ஓபிஎஸ் இருந்துவிட்டார். மேடையில் ஈபிஎஸ், எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

மேடைக்கு வந்த திரவுபதி முர்முவை எடப்பாடி பழனிச்சாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பேசிய அவர், ‘அதிமுக சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திரௌபதி முர்முவுக்கு முழு ஆதரவு அளிப்போம்.பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிரதமருக்கு நன்றி’என்றார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து சென்ற பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் காத்திருந்து திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து பன்னீர் செல்வம் சால்வை அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர் செல்வம், ‘அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகின்றேன்.குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவைத் தெரிவித்து இருக்கிறோம்.அதிமுக சார்பில் இதயப் பூர்வ ஆதரவைத் தெரிவிக்கிறேன் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் என்பதை மாற்றி தலைமை நிலையச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் ஒருங்கிணைப்பாளர்தான் என்று ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response