மத்திய அரசின் இராணுவத்துறை கொண்டு வந்திருக்கும் ‘அக்னிபத்’ – அக்கினிப் பாதை’ எனும் திட்டம் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்தத் திட்டத்தின்படி வேலைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் போர் வீரர்கள் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்த ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததும் அவர்களில் 25 விழுக்காடு வீரர்கள் மட்டுமே பணியில் தொடர அனுமதிக்கப்படுவார்கள். மீதி 75 விழுக்காட்டினர் பணிக்காலம் முடிவடைந்து விடும். பிஎஃப் போல அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகையும் வேறு சில உதவித் தொகைகளும் சேர்ந்து சுமார் 12 இலட்சம் அவர்களுக்கு வழங்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
இந்தத் திட்டம் இரண்டு கோணங்களில் சர்ச்சையாகி இருக்கிறது.
ஒன்று, இப்படி பணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் என்ன ஆவார்கள்? என்ற கேள்வி வருகிறது. அவர்களுக்குத் தொழில் துவங்க வங்கிக் கடன்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றெல்லாம் இந்தத் திட்டத்தில் இடம் இருந்தாலும் என்ன தொழில் செய்வார்கள்? என்ற கேள்வி வருகிறது. இவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். ஆயுதங்களைக் கையாளத் தெரிந்தவர்கள். தீவிரவாதக் குழுக்களுக்கும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கும் வேலை சுலபமாகி விடும். இவர்களில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு விடலாம். எந்தப் பயிற்சியும் தேவைப்படாது. இது முக்கிய பிரச்சினையாக முன் வைக்கப்படுகிறது. இப்படி ஈராக் இராணுவத்தைக் கலைத்து எல்லாரையும் வேலையில் இருந்து தூக்கியதில், வேலை போன வீரர்கள் சேர்ந்துதான் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் வலுப் பெற்றது என்ற ஒரு தியரி இருக்கிறது.
அதுவுமின்றி, இப்படி போராளிக் குழுக்களில் சேரும் முன்னாள் வீரர்களுக்கு ராணுவத்தின் அணுகுமுறையும் கூடத் தெரியும் என்பதால் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக வியூகம் வகுக்கவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி உதவும். வட இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்திய அமைதிப்படை எதிர்கொண்ட பல பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம் அதுதான். விடுதலைப் புலிகள் பெரும்பாலானோர் இந்திய இராணுவத்தினால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அந்தப் பயிற்சி இந்திய இராணுவ அணுகுமுறை, அவர்களின் தகவல் தொடர்பு வழிமுறைகள் பற்றிய ஆழமான அறிவைப் புலிகளூக்குக் கொடுத்திருந்தது. அதனால் பல்வேறு விசயங்களில் அமைதிப் படையின் வியூகங்களை சுலபமாகத் தகர்க்க முடிந்தது.
இரண்டு, தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாநிலங்களில் வேலை வாய்ப்புக்கு இளைஞர்களில் ஒரு சாரார் இராணுவத்தேர்வைத்தான் நம்பி இருக்கிறார்கள். இப்போது ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது துவங்கினால் இதில் வேலை உத்திரவாதம் இல்லை என்று ஆகி விடுகிறது. இராணுவத்தை ஒரு கேரியர் என்று நம்பி வளரும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது.
முதல் காரணத்தை வைத்து எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றன. இரண்டாவது காரணத்தை வைத்து பொதுமக்கள் எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பு இப்போது போராட்டமாகவே மாறி விட்டிருக்கிறது. பீகார், பஞ்சாப், அரியானா, உபி, ராஜஸ்தான், உத்திராகண்ட் மாநிலங்களில் ரயில் மறியல்கள், போராட்டங்கள் துவங்கி விட்டன. சிலர் ரயில்களை எரித்து, எம்எல்ஏ வண்டிகளை உடைத்தெல்லாம் வன்முறையிலும் இறங்கி இருக்கிறார்கள்.
மோடி அரசு தொட்டதெல்லாம் பிரச்சினையில்தான் போய் முடிகிறது என்பதில் இப்போதெல்லாம் ஆச்சரியம் வருவதே இல்லை. அது பொருளாதாரமாக இருக்கட்டும், வரி சீரமைப்பாக இருக்கட்டும், கஷ்மீர், குடியுரிமை, விவசாயம், மருத்துவம், லாக் டவுன் என்று எதைத் தொட்டாலும் அதில் ஒரு அதீத சொதப்பல் இருக்கவே செய்கிறது.
இராணுவ வீரர் பணித் திட்டம் என்பது ஆகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த விசயம். இதனைக் கொண்டு வருவதற்கு முன்பு எத்தனை பேரைக் கலந்து ஆலோசித்தார்கள் என்று தெரியவில்லை. யாரையும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லி விடலாம். பண நீக்கம், சிஏஏ, விவசாயச் சட்டம் என்று எதற்காவது யாரையாவது கலந்து ஆலோசித்தார்களா என்ன இதற்கு மட்டும் ஆலோசிப்பதற்கு?
எதிர்பார்த்தபடியே பாஜக உள்ளிருந்தே விமர்சனங்கள் வருகின்றன. வருண் காந்தி இதனை விமர்சித்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் இதில் இருந்து தூர நிற்கிறது. கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இந்தத் திட்டத்தை திரும்பப்பெறச் சொல்கிறது. பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் இதனை விமர்சித்திருக்கிறார்.
இந்தியாவில் இப்படி ஒப்பந்த அடிப்படையில் இராணுவ வீரர்களைக் கொண்டு வருவது பற்பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். என்னைப் பொருத்தவரை, நவீன யுகத்தில் இராணுவத்திற்கு ஆட்களை எடுப்பதை எப்படிக் குறைப்பது என்றுதான் ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும். இராணுவத்தை வைத்து தேசப் பெருமையை உருவமைப்பது என்பது பண்டைய சிந்தனாவாதம். நவீன உலகில் ஒரு தேசத்தின் பெருமை என்பது அவர்களின் கல்வித்தரம், பொருளாதார வலிமை, மனித உரிமைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், கலாச்சார பன்மைத்துவம், தொழில் நுட்பம், பெண்கள் மற்றும் சிறுபான்மை உரிமைகள் போன்றவற்றில்தான் இருக்கிறது.
அதுவுமின்றி கல்வி, மருத்துவ கட்டுமானங்கள் படு மோசமாக உள்ள இந்தியா போன்ற நாடு, உலகிலேயே ஐந்தாவது பெரிய இராணுவத்தை வைத்து இயங்குவதுதான் உண்மையிலேயே மோசமான தேச விரோதச் செயல்.
நமக்கு இப்படி வலிமையான இராணுவம் தேவைப்படுகிற விசயங்கள் இரண்டுதான்; கஷ்மீர், அக்சாய் சின்/ தவங். இந்தப் பஞ்சாயத்துகளை நிலுவையில் வைத்திருக்கிற இரண்டு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுதம் உள்ள நாடுகளில் எத்தனை போர் வீரர்கள் இருக்கிறார்கள் என்பது நடைமுறையில் அர்த்தமற்ற ஒரு கணக்கு. உண்மையில் அறிவார்ந்த தலைவர்கள் இராணுவத்தில் வீரர்கள் எண்ணிக்கையைக் கூட்ட முனைய மாட்டார்கள் பாகிஸ்தான், சீனா இந்த இரண்டு நாடுகளுடன் உள்ள எல்லைப் பிரச்சினைகளை நீண்ட கால அடிப்படையில் தீர்க்கும் முயற்சிகளில் இறங்குவார்கள். அதன் விளைவாக இராணுவத்தை இளைக்கச் செய்வதும் இராணுவத்துக்குக் கொட்டிக் கொண்டிருக்கும் செலவுகளைக் குறைப்பதும்தான் அறிவார்ந்த தலைவர்கள் செய்யும் வேலை.
இங்கே இராணுவத்தைப் பெருக்குவதையும் தாண்டி, மொத்த தேச மக்களையும் இராணுவமயமாக்குவதை ஆர்வத்துடன் முன்னெடுக்கிறார்கள்.
அக்னிபத் திட்டம் இந்தியாவை நிஜமாகவே நெருப்பு சூழ்ந்த பாதைக்குத்தான் கொண்டு செல்லப் போகிறது.
– ஸ்ரீதர் சுப்ரமணியம்