சி.பா.ஆதித்தனாரின் கொள்கைகளைச் சமரசமின்றி முன்னெடுப்போம் – சீமான் உறுதி

நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 24-05-2022 காலை 10 மணியளவில் சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

எங்களது நாம் தமிழர் கட்சியினுடைய நிறுவனத்தலைவர், பாமரர்களும் நாட்டு நடப்புகளைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும், அரசியல் தெளிவுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, ‘தினத்தந்தி’ என்கின்ற நாளேட்டினை தொடங்கி, அதனை இதழியல் உலகின் முதன்மையான நாளேடாக வளர்த்தெடுத்த பெருந்தகை, தமிழின் மீதும், தமிழர் மீதும் பெரும்பற்று கொண்ட காரணத்தினால், ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்று முழக்கத்தை முன்வைத்தவர். இனத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக, தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தை வெளிக்காட்டும் விதமாக ‘நாம் தமிழர்’ என்ற அரசியல் பேரியக்கத்தைத் தொடங்கியவர், எங்களுடைய ஐயா ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்களிடைய 41வது நினைவைப் போற்றுகின்ற இந்நாளில், தமிழ்மொழி மீட்சி, தமிழின எழுச்சி என்ற உயரிய நோக்கத்திற்காகத் தன் வாழ்நாள் முழுதும் அரும்பாடு ஆற்றிய அவருடைய பணியை, அவருடைய பிள்ளைகள் நாங்கள் சமரசம் இன்றித் தொடர்ந்து முன்னெடுப்போம் என்ற உறுதியை ஏற்கிறோம். மதிப்புமிக்க பெருந்தகை, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி பெருமிதத்தோடு தனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீமான் அளித்த பதிலுரையின் சுருக்கிய எழுத்துவடிவம்,

மோடி ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வந்து தொடங்கிய திட்டங்கள் எல்லாம் இதுவரை நன்மைகளைக் கொடுத்திருக்கிறதா? எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் ஒவ்வொரு முறையும் வரும்போதும் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே செங்கல் ஒன்றிருந்தது, அதையும் ஒருத்தர் எடுத்துச் சென்றுவிட்டார். ஆட்சிக்கு வந்து எட்டாண்டுகளில் மோடி அவர்களால் தமிழ்நாட்டிற்கு எத்தனை திட்டங்கள் அறிவிக்கப்பட்டது? அவையெல்லாம் நிறைவேறிவிட்டதா? அதனால் நன்மைகள் கிடைத்து விட்டதா? வெற்று அறிவிப்புகள் காதுகளுக்கு செய்தியாக வரும்போது இனிக்கும், வேறு ஒன்றும் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response