இன்று சித்திரை முழுநிலவு நாள் கண்ணகி கோயில் வழிபாட்டு நேரம் குறைப்பு – பெ.மணியரசன் எதிர்ப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்….

காவியத் தலைவி கண்ணகி இறுதி நிலை அடைந்த இடம் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. சேரன் செங்குட்டுவன் எழுப்பிய கண்ணகி கோயில் அங்குள்ளது. மங்கல தேவி கோயில் என்று அது வழங்கப்படுகிறது.

ஆண்டு தோறும் சித்திரை முழு நிலவு நாளில், கண்ணகி கோட்டமான மங்கல தேவி கோயிலுக்குப் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் சென்று பூசை செய்து வழிபடுவது வழக்கம்.

இவ்வாறு தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் சென்று கண்ணகியை வழிபடுவதைக் கேரள ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. கேரள அரசின் காப்புக் காட்டு எல்லைக்குள் கண்ணகி கோயில் உள்ளது என்று தவறாக வாதம் செய்து, கேரள அரசு அனுமதித்தால் தான் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் வரமுடியும் என்று தடைபோட்டது.

இந்தச் சிக்கல் 1975-இல் பெரிதாக வெடித்த போது, தமிழ்நாட்டு நில அளவை அதிகாரிகள், தங்கள் ஆவணங்களிலிருந்து அளந்து காட்டி கண்ணகி கோயில் (மங்கல தேவி கோயில்) தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது என மெய்ப்பித்தார்கள்.

அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு வாரம் மட்டும் – கண்ணகி கோயில் வந்து தமிழர்கள் வழிபட அனுமதிப்போம் என்றது கேரள அரசு. சில ஆண்டுகள் கழித்து, மூன்று நாட்கள் மட்டும் தான் கண்ணகி கோயில் செல்ல அனுமதிப்போம் என்றது. அதையும் பின்னர் குறைத்து ஒருநாள் மட்டும் தான் சித்திரை முழுநிலவு அன்று பகல் 4 மணி வரைதான் அனுமதிப்போம் என்று நேரத்தைக் குறைத்தனர் கேரள ஆட்சியாளர்கள்.

நடப்பாண்டில் 16.04.2022 சித்திரை முழுநிலவு நாளில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டும் தான் கண்ணகி கோயிலுக்குப் போக மக்களை அனுமதிப்போம் என்று மேலும் நேரத்தைக் குறைத்துள்ளது கேரள அரசு.

இந்த நேரக் குறைப்பைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

நமது தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், கேரளத்தின் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு, பிற்பகல் 2 மணிவரை தான் அனுமதிக்கப்படுவர் என்று கெடுபிடி செய்கிறார். அதன் பிறகு பனிமூட்டம் அதிகமாகி விடும் என்று முரளிதரன் கூறுகிறார்.

மக்கள் நடமாட முடியாத அளவில் பகல் 2 மணிக்குப் பனி மூட்டம் போடுவதில்லை என்று கம்பம், கூடலூர், குமுளி பக்கம் வாழும் தமிழர்களும் தமிழக மங்கல தேவி அறக்கட்டளை நிர்வாகிகளும் கூறுகிறார்கள்.

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கூறுவது போல் இந்த ஆண்டு பனி மூட்டம் முன் கூட்டியே உருவாகிவிடுகிறது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு நாள் அனுமதி என்பதை இரண்டு நாள் அனுமதியாக மாற்றி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஏற்கெனவே ஒருவாரம் தொடர்ந்து வழிபாடு நடந்த கோயில் தானே கண்ணகி கோயில்! ஏன் அவ்வாறு தமிழ்நாடு அரசு வாதாடி வாய்ப்பை உருவாக்க வில்லை?

இன்று மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் மட்டும் அல்ல, கருணாநிதி, எம்.ஜி.ஆர், செயலலிதா ஆட்சிக் காலங்களிலேயே கேரள ஆட்சியாளர்கள், கண்ணகிக் கோயில் பகுதி மட்டுமல்ல பல்வேறு பகுதிகளில் தமிழ்நாட்டிற்குரிய நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகவல்லி அணைப்பகுதியைக் கேரள வனத்துறை ஆக்கிரமித்துக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த மலை நீரோட்டங்களைத் தடுத்துக் கேரளப் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பாண்டியாறு பகுதிகளைக் கேரளம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதே ஆக்கிரமிப்பு! கோவை மாவட்டத்திலும் இதே ஆக்கிரமிப்பு!
தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இடையே சற்றொப்ப 600 கிலோமீட்டர் நீள எல்லைப் பகுதி இன்னும் அளந்து ஒதுக்கப்படாமலே இருக்கிறது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசியல்! கேரளத்தில் மலையாள மாடல் அரசியல்! கேரளத்தில் காங்கிரசு ஆண்டாலும் கம்யூனிஸ்ட்டு ஆண்டாலும் மலையாள இன ஆதிக்கம் – தமிழர் புறக்கணிப்பு என்பது தொடர்கதைதான். மலையாள அரசியல் தலைவர்கள் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று கூறிக் கொள்ள மாட்டார்கள்; மலையாளிகள் என்றே கூறிக் கொள்வர். அவர்கள் அவ்வாறு தங்களது இயற்கையான இனப் பெயரைக் கூறிக் கொள்வது தவறு அல்ல. அவர்களின் தமிழர் எதிர்ப்பும், மலையாள இன ஆதிக்கமும்தான் நமது கண்டனத்திற்குரியவை!

கண்ணகி கோயில், கேரளத்தின் காப்புக் காட்டுப் பகுதியில் இருப்பதால், அக்கோயிலுக்குச் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் போடுவதாகக் கேரள ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதே காப்புக் காட்டுப் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு மேல் மக்கள் வெள்ளம் வழிபடப் போகலாம் என்று அனுமதிக்கிறது கேரள அரசு! அதே பெரியாறு காப்புக் காட்டுக்குள் இருக்கும் கண்ணகி கோயிலுக்கு மட்டும் கெடுபிடிகள் மிக்கக் கட்டுப்பாடுகள்; அக்கட்டுப்பாடுகள் இருந்தும் ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் தான் அனுமதி!

கேரள ஐயப்பன் மலையாளிகள் தெய்வம்; கண்ணகி, தமிழச்சி; தமிழர் தெய்வம் என்ற இனப்பாகுபாடுதான்! கேரளத்தில் மலையாள அரசியல், தமிழ்நாட்டில் மலையாளிகளையும் மற்றவர்களையும் உடன்பிறப்புகளாக இணைத்துக் கொண்ட திராவிட அரசியல்! தமிழர்களின் சட்டப்படியான தாயக உரிமைகள் மீதோ, உயிர்கள் மீதோ அக்கறை இல்லாத திராவிட அரசியல் இங்கே! அதனால் காவிரிச் சிக்கல் என்றால் கர்நாடகத்தில் தமிழர்களைக் கொல்வார்கள்; தாக்குவார்கள். முல்லைப் பெரியாறு சிக்கல் என்றால், கேரளத்தில் தமிழர்களையும், தமிழ்நாட்டு ஊர்திகளையும் தாக்குவார்கள். ஆந்திரத்தில் செம்மரம் காணாமல் போனால் தமிழர்களைக் கடத்திக் கொண்டு போய் சுட்டுக் கொல்வார்கள்!

கண்ணகி கோயிலுக்குக் கேரள வனத்துறைக்குள் போகாமல், தமிழ்நாட்டு வனப் பகுதிக்குள் பளியங்குடி வழியாகச் செல்லலாம். கூடலூருக்கு மேற்கே செல்லும் குமுளி சாலையில் இருந்து 5.6 கிலோ மீட்டர் தான் கண்ணகி கோயில்! அதில் சாலை போட வேண்டும் என தமிழ்நாட்டில் கோரிக்கை எழுந்து, கலைஞர் கருணாநிதி 1996-2001 ஆட்சிக் காலத்தில் அச்சாலை போட ஒப்புக் கொண்டார். ஆனால் கேரள எதிர்ப்பால் அதைக் கைவிட்டார்.

இப்பொழுதாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தப் பளியங்குடிப் பாதையில் சாலை போட்டு, ஆண்டு முழுவதும் கண்ணகி கோயிலுக்கு தமிழ்நாட்டு மக்கள் சென்று வழிபட வாய்ப்பளிக்க வேண்டும். அத்துடன், அளந்து ஒதுக்கப்படாமல் இருக்கின்ற தமிழ்நாடு – கேரள எல்லையை அளந்து வரையறுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response