சித்திரைத் தலைநாள் வாழ்த்து – வைகோ அறிக்கை

சித்திரை முதல்நாளையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாகத் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.

இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.

வெப்பம் மிகுந்துள்ள இக்காலத்தில், குளிர்ந்த நீரையும், பழங்களையும் வழங்கி கோடையின் தகிப்பைப் போக்குதல் தமிழர்களின் வழக்கமாகும். தமிழர்களின் பொற்காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் புது யுகமாக இந்தக் காலம் அமைந்துவிட்டது.

துன்ப இருளில் கலங்கித் தவிக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு விடியலைக் காணவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தை மலரச் செய்யவும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் தன்மான உணர்வுடன் உரிமைச் சங்கநாதம் எழுப்புகின்றனர்.

ஏப்ரல் 14 ஆம் நாள்தான் இந்திய அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள். ஆதலால், அப்பெருமகனார் கனவுகண்ட சமூக நீதி மலர உறுதிகொள்வோம்.

ஒளி மயமான எதிர்காலம் தமிழ்க் குலத்துக்குக் கட்டியம் கூறும் இவ்வேளையில், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், தமிழக மீனவர்களின் அல்லல்களை அகற்றவும், விவசாயிகளின் துயர் துடைக்கவும் இச்சித்திரைத் தலைநாளில் சூளுரை மேற்கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response