தமிழ்நாடு கல்விக் குழுவுக்கு இவர் தலைவரா? இது சரியா? – பெ.மணியரசன் கேள்வி

தமிழ்நாடு கல்வி குழுவிற்கு நிர்வாகத் தலைவராகக் கல்வியாளரை அமர்த்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழ்நாடு அரசு பல்வேறு வல்லுனர்களைக் கொண்ட புதியக் கல்விக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இது தமிழ்நாடு அரசு கல்வி நிலையங்களுக்கான பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டங்களை வகுக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

இந்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுக் கல்வித் துறையிலும் செயல்படுத்தத் தீவிரம் காட்டி அதற்கான பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவில் இணைந்துள்ள கலைக் கல்லூரிகளுக்கும் (UGC) நுழைவுத் தேர்வை நடத்துவோம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய அரசின் இந்த ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்தத் தமிழ்நாடு அரசு செயல் திட்டம் எதையும் வகுக்காத நிலையில் அது அமைத்துள்ள புதிய வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் என்னவாகும் என்ற வினாக்குறி எழுகிறது.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்தக் குழுவில் தகுதி மிக்க வல்லுநர்கள் பலர் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதன் தலைவராக ஒரு கல்வியாளரை அமர்த்தாமல் நீதிபதியை நியமித்திருப்பது சரியா என்ற கேள்வி கல்வியாளர்களிடையே உள்ளது.

நீதிபதி முருகேசன் அவர்களைத் தலைவராக நியமித்துவிட்ட நிலையில் நிர்வாகத் தலைவராக (Executive Chairman) மேற்படி குழுவில் உள்ள தகுதி வாய்ந்த ஒருவரை அமர்த்தி அக்குறைபாட்டைச் சரிசெய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கதின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response