முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்டவை என்னென்ன? – இலஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றதற்கான ஆவணங்கள் மற்றும் அனைத்து அமைச்சர்களின் துறையில் நடைபெற்ற ஊழல்களை, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் தமிழக ஆளுநரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் அப்போது அதிமுக ஆட்சி என்பதால் ஊழல் புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்தது.

அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும், ஊழல் அமைச்சர்களின் துறை ரீதியான புகார்களின் படி இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள், பினாமிகள், உதவியாளர்கள் வீடுகளில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனைகளில் கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள், பல கோடி ரொக்கம், வெளிநாட்டு முதலீடுகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், பினாமிகளுக்கு சொந்தமான 60 இடங்களில் 2021 ஆகஸ்ட் 10 ஆம் தேதி இலஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரொக்கப் பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனைக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.2 கோடிக்கு வைப்புத் தொகை ஆவணங்கள், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி, சந்திரசேகர், முருகேசன், ஜேசுராபர்ட், ராஜா, ராஜன் உள்ளிட்ட 17 பேர் மீதும் 10 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 29 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேலுமணி ஆதரவாளர் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், முன்பு நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களை இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்தனர். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 23.5.2016-6.5.2021 ஆண்டு காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் பெயரில் பல்வேறு நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்ததும், அசையா சொத்துகள் வாங்கியதும் தெரியவந்தது.

இதன் மூலம் எஸ்.பி.வேலுமணி தனது வருமானத்தை மீறி ரூ.58.23 கோடிக்கு சொத்துகள் சேர்த்துள்ளார். இது அவரது வருமானத்தை விட 3,928 சதவீதம் கூடுதலாகும். பின்னர் கோவை இலஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் எழிலரசி அளித்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், நிறுவனங்கள், மற்றும் எஸ்.பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர், சந்திர பிரகாஷ் உள்ளிட்ட 10 பேர் மற்றும் ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லரி, கான்ஸ்ட்ரோமால் பிரைவேட் லிமிட், ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மீது கூட்டுச் சதி, ஊழல் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் இலஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது 58.23 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக் குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து நேற்று எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், மற்றும் உறவினர்கள், பினாமிகள் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 11.153 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என இலஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்;

59 இடங்களில் (கோயம்புத்தூர்-42, திருப்பூர் -2, சேலம்-4, நாமக்கல் – 1, கிருஷ்ணகிரி -1, திருப்பத்தூர்-1, சென்னை – 7 மற்றும் கேரள மாநிலம் ஆனைகட்டி-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் (15.3.2022) சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் 11.153 கிலோ கிராம் தங்க நகைகள், 118.506 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் ரூ.84,00,000/-, சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடி கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. மேலும் சுமார் ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response