அதிர்ச்சியளிக்கும் அமைச்சர் சேகர்பாபுவின் செயல் – முதல்வர் தலையிடுவாரா?

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மயிலாப்பூர் கோயிலுக்குச் சொந்தமான ஒரு மண்டபத்தில் மகா சிவராத்திரி விழாவை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர்.

மகா சிவராத்திரியன்று கண் விழிக்க வேண்டும் என்கிற மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சுமார் 40,000 பேரைக் கூட்டி மார்ச் 1 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆன்மீக பிரச்சாரம், ஆன்மீக பட்டிமன்றம், ஆன்மீக இசை என இரவு முழுவதும் ஆன்மீகத்தை மக்களிடம் பரப்பப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக திமுக அரசுதான் இந்தப் பணியைச் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறநிலையத்துறையின் பணி என்பது கோயில்களைப் பராமரிப்பது, கோயில்களில் நடக்கும் சடங்குகள், கும்பாபிஷேகங்களை முறையாகக் கண்காணித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவது, கோயில் நிலங்களை மீட்டெடுப்பது போன்றவைதான். இதனை மிகவும் சிறப்பாக அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். ஆனால், மக்களைத் திரட்டி ஆன்மீகம் என்ற பெயரில் மதப்பிரச்சாரம் செய்வது அறநிலையத்துறையின் பணியல்ல. அது திராவிட மாடலும் அல்ல.

உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை, ‘திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகிறார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, ‘தேர்தல் வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக உயர்த்திவிட்டது, அரசியலில் அவர் மிகப்பெரிய பங்கை ஆற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது’ என தலையங்கம் தீட்டியுள்ளது.

மக்களிடம் சென்று கல்வி, மருத்துவத்தை வழங்குவது, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வதுதான் திராவிட மாடல். ஆனால், மக்களிடம் மதப்பிரச்சாரம் செய்வதுதான் திராவிட மாடல் என சேகர்பாபு போன்ற அமைச்சர்கள் செய்வது தமிழ்நாடு அரசு கட்டிக்காத்து வளர்த்து வரும் அடிப்படைக் கொள்கையை குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்தான போக்கு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதுவரை எந்த அறநிலையத் துறையும் செய்யாத வேலையை இப்போது ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

உத்தர பிரதேசத்தில் ராமன் பிறந்ததாக சொல்லப்படும் அயோத்தியை கோயில் நகரமாக, புனித நகரமாக இந்துத்துவ பாஜக அரசு அறிவிக்கிறது. ஆனால், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, மயிலாப்பூரை ஆன்மீக நகரமாக மாற்றப்போகிறேன் என்கிறார். அயோத்தியிலாவது ராமன் பிறந்தான் என்று கூறுகிறார்கள்? மயிலாப்பூரில் யார் பிறந்தார்? அதனை ஆன்மீக நகரமாக மாற்றுவதற்கு. சென்னையிலுள்ள மற்ற தொகுதிகளைக் காட்டிலும் மயிலாப்பூர் மட்டும் ஏன் ஆன்மீக நகரமாக சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிகிறது. வண்ணாரப் பேட்டையோ, ராயபுரமோ ஆன்மீக நகரமாக முடியாதா?

திராவிட மாடல் ஆட்சியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கெனவே சபதம் எடுத்துக்கொண்டவர்கள் வாழும் பகுதிதான் ஆன்மீகப் பகுதி, அவர்களை மகிழ்விப்பதுதான் எனது கடமை என ஒரு சட்டமன்ற உறுப்பினர் புறப்படுகிறார். அவருக்குத் துணையாக மயிலாப்பூரை ஆன்மீக நகரமாக மாற்றுவதன் ஒரு பகுதியாக மக்களைத் திரட்டி மதப்பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

இது திராவிடன் மாடல் ஆட்சியைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். அண்ணாவும், கலைஞரும் கட்டிக்காத்த கொள்கையில் ஓட்டை போடுகிற மிகப்பெரிய ஆபத்தாகும். உண்மைகள் கசக்கும் என்று சொன்னாலும் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை. தமிழ்நாடு முதலமைச்சர் கட்டாயம் இதில் தலையிட வேண்டும்.

திமுகவில் இலட்சக்கணக்கான சிந்தனையாளர்கள், திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் இன்னமும் அமைச்சர்களாக, பொறுப்பாளர்களாக, உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் சேகர்பாபு புரிந்துகொள்ள வேண்டும் என பணிவோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

– விடுதலை இராசேந்திரன்

Leave a Response