தேசியம் என்பது இன்று அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே உரித்தான ஒரு விடயம்போல ஆகிவிட்டது. அது மக்களுக்கானது. அது ஒரு இனத்தின் தனித்துவமான மொழி, உணவு, உடை, வாழிடம் என்று பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் முறைமையாகும். மொழி, உணவு, உடை, வாழிடம் என்று எல்லாமே அவை சார்ந்துள்ள இயற்கைச் சூழலாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
எனவே, இயற்கைச் சூழல்பாதிக்கப்படும்போது இவையாவுமே பாதிக்கப்பட்டுக் கடைசியில் தேசியமே கேள்விக்கு உள்ளாகிறது. அந்தவகையில், மாணவர்கள் இயற்கையோடு இசைந்து வாழ்வதும் சுற்றுச்சூழலின் மீது அக்கறை கொள்வதும் தேசியத்துக்கான அவர்களின் அதிசிறந்த பங்களிப்பாக அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்களாக கொரோனா பெருங்கொள்ளை நோயும், காலநிலை மாற்றமும் உள்ளன. இரண்டும் மனுக்குலத்துக்குப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இரண்டும் இயற்கையை நாம் அழித்ததால் ஏற்பட்டுள்ள விளைவுகளேயாகும். இதனை, இயற்கையை நாம் அழித்ததால் இயற்கை எமக்கு வழங்கிய தண்டனைகளாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா சீனாவின் தயாரிப்பா? இல்லையா? என்பது விவாகத்துக்கு உரியது. ஆனால், இந்நோய் காட்டு விலங்குகளில் உறையும் வைரசுகள் விகாரம் பெற்று மனிதர்களுக்குத் தாவியதால் ஏற்பட்டுள்ளது என்பதே அறிவியல்.
அந்த வகையில், காடுகளில் இருக்க வேண்டிய விலங்குகளை, இயற்கையையும் மீறி நாட்டுச் சந்தைக்குள் கொண்டுவந்ததன் விளைவே இன்று முழு உலகத்தையும் முகக்கவசம் மாட்ட வைத்திருக்கிறது.
நாம் எரிபொருட்களை எரித்து வளியில் குவித்துக் கொண்டிருக்கும் கரிக்காற்றே பூமியைச் சூடுபோட்டு வருகிறது. பூமி வெப்பம் அடைவதால் துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி வழிகின்றன. இதனால், இவற்றுக்கு கீழே உறங்கு நிலையிலுள்ள, மனிதன் தோன்ற முன்னரே தோற்றம் பெற்ற வைரசுகள் வெளிக்கிளம்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவை பரவ ஆரம்பித்தால் அது கொரோனாவைவிடப் பன்மடங்கு கொடிய நோய்களை ஏற்படுத்துவதாக அமையும்.
கொரோனா என்ற கொள்ளை நோயாகவும், காலநிலை மாற்றங்களாகவும் இயற்கை விடுத்திருக்கும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளாது, நாங்கள் அனைவருமே இயற்கையுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகவே செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். இதில் மாணவர்களே பெரும் பங்காற்ற முடியும். அதனாலேயே மாணவர்களுக்குச் சூழற்கல்வி, சூழல் விழிப்புணர்வு, சூழல்பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்குடன் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்படுகின்றன
இவ்வாறு அவர் உரையாற்றினார்.